Home நாடு டாக்டர் சுப்ராவுக்கு எதிராக எட்மண்ட் சந்தாராவா? வேதமூர்த்தியா?

டாக்டர் சுப்ராவுக்கு எதிராக எட்மண்ட் சந்தாராவா? வேதமூர்த்தியா?

1131
0
SHARE
Ad

சிகாமாட் – எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடப் போவதாக மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் அறிவித்திருப்பதைத் தொடர்ந்து அவரை எதிர்த்துப் போட்டியிடப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சிகாமாட் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடக் குறிவைத்து, கடந்த ஓரிரு ஆண்டுகளாக பணிகள் ஆற்றிவரும், டத்தோஸ்ரீ டாக்டர் எட்மண்ட் சந்தாரா பிகேஆர் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுவார் எனப் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2013 பொதுத் தேர்தலில் உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வி கண்ட எட்மண்ட் சந்தாரா, அதன் பின்னர் பிகேஆர் கட்சியில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

எட்மண்ட் சந்தாரா
#TamilSchoolmychoice

சிகாமாட் நாடாளுமன்றம் பக்காத்தான் தொகுதி உடன்பாட்டின் கீழ் பிகேஆர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி சிகாமாட் தொகுதியில் டாக்டர் சுப்ராவை எதிர்த்துப் போட்டியிடத் தான் தயார் என்றும் தன்னால் அந்தத் தொகுதியில் வெல்ல முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

வேதமூர்த்தியின் ஹிண்ட்ராப் இயக்கமும், ஏ.இராஜரத்தினத்தின் தலைமையில் இயங்கும் மீரா நியூ ஜென் கட்சியும், பக்காத்தான் கூட்டணியின் வியூகப் பங்காளிக் கட்சிகளாக செயல்பட்டு வருகின்றன.ஆனால் அந்தக் கட்சிகளுக்கு பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா என்பது இதுவரை தெரியவில்லை.

மீரா நியூ ஜென் கட்சி இந்தப் பொதுத் தேர்தலில் போட்டியிடாது என இராஜரத்தினம் ஏற்கனவே அறிவித்திருக்கிறார்.

ஆனால், வேதமூர்த்தி சிகாமாட்டில் போட்டியிடத் தயார் என்பதால் அவருக்கு அந்தத் தொகுதியே ஒதுக்கப்படுமா அல்லது வேறு ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.