Home உலகம் ரஷிய மருத்துவமனையில் தவறுதலாக உயிரோடு பதப்படுத்தப்பட்ட பெண்!

ரஷிய மருத்துவமனையில் தவறுதலாக உயிரோடு பதப்படுத்தப்பட்ட பெண்!

949
0
SHARE
Ad

மாஸ்கோ – ரஷியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில், பெண் ஒருவருக்கு தவறுதலாக உப்புநீருக்குப் பதிலாக சடலங்களைப் பதப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஃபார்மலின் என்ற மருந்து உடலில் செலுத்தப்பட்டதால், அவர் உயிரிழந்து இருப்பது மருத்துவ உலகை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.

எக்காடெரினா பெட்யாவா என்ற 27 வயது பெண்ணை, வழக்கமான அறுவை சிகிச்சை ஒன்றிற்காக, அவரது பெற்றோரான இகோரும், காலினியாவும் உல்யானோவோஸ்க் என்ற பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர்.

அறுவை சிகிச்சையெல்லாம் முடிந்து அப்பெண்ணுக்கு வழக்கமான உப்புநீர் செலுத்துவதற்குப் பதிலாக, தவறுதலாக சடலங்களைப் பதப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஃபார்மலின் என்ற மருந்து உடலில் செலுத்தப்பட்டுவிட்டது.

#TamilSchoolmychoice

இந்த விசயம் 14 மணி நேரங்களுக்குப் பிறகு, எக்காடெரினாவின் உறுப்புகள் ஒவ்வொன்றாகச் செயலிழக்கத் தொடங்கிய பின்னரே மருத்துவர்களுக்குத் தெரியவந்திருக்கிறது.

எனினும், இந்தத் தவறு குறித்து எக்காடெரினாவின் பெற்றோருக்குத் தெரிவிக்காமல், “உங்கள் மகளின் அறுவை சிகிச்சையின் போது மருத்துவத் தவறு நடந்துவிட்டது. அவர் இப்போது சுயநினைவின்றி இருக்கிறார். அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டிருக்கிறது” என்று மட்டுமே தெரிவித்திருக்கிறது மருத்துவமனை நிர்வாகம்.

தனது மகளுக்கு என்ன நடந்தது என்றே தெரியாமல், அவர் கொஞ்சம் கொஞ்சமாக மரணத்தைத் தழுவுவதை பார்த்துக் கதறுவதைத் தவிர அந்த தாய் செய்வதறியாது துடித்திருக்கிறார்.

மீண்டும் மாஸ்கோவில் உள்ள மருத்துவமனை ஒன்றில், அவசர சிகிச்சைப் பிரிவில் எக்காடெரினாவை அனுமதித்திருக்கின்றனர்.

என்றாலும், எக்காடெரினாவின் உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழந்து விட்டதால், மருத்துவர்கள் கைவிரித்திருக்கின்றனர்.

இறுதியாக இரண்டு நாட்கள் மரணப் போராட்டத்திற்குப் பிறகு எக்காடெரினாவின் உயிர் பிரிந்துவிட்டது.

இச்சம்பவம் ரஷிய மருத்துவமனைகள் மற்றும் உலக மருத்துவர்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.