Home நாடு “அரசருக்கும், நாட்டிற்கும் தான் விசுவாசம்; கட்சிகளுக்கு அல்ல” – ஆயுதப்படைத் தலைவர் விளக்கம்!

“அரசருக்கும், நாட்டிற்கும் தான் விசுவாசம்; கட்சிகளுக்கு அல்ல” – ஆயுதப்படைத் தலைவர் விளக்கம்!

968
0
SHARE
Ad
ஆயுதப்படைத் தலைவர் ராஜா முகமது அஃபாண்டி ராஜா முகமது நூர்

கோலாலம்பூர் – தான் கூறிய கருத்திற்காக கடந்த 1 வாரமாக பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட ஆயுதப்படைத் தலைவர் ராஜா முகமது அஃபாண்டி ராஜா முகமது நூர், தனது படைகள் அரசருக்கும், நாட்டிற்கும் தான் விசுவாசத்தோடு இருக்குமே தவிர எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் கிடையாது என விளக்கமளித்திருக்கிறார்.

அதேவேளையில், ஆயுதப்படைகள் மக்களுக்கும், ஆளும் அரசாங்கத்திற்கும் சேவையாற்றவும் செய்யும் என்றும் ராஜா முகமது கூறியிருப்பதாக உத்துசான் போர்னியோ செய்தி வெளியிட்டிருக்கிறது.

“ஒரு படைவீரனின் உயிரில், அவன் பிறந்த நிமிடத்திலிருந்து இறக்கும் வரையில், அரசருக்கும், நாட்டிற்கும் உண்மையான விசுவாசியாக இருக்கும் ஆன்மா கலந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

“அது என்றுமே ஓயாது, எனவே ஆயுதப் படைகள் என்பது அரசருக்கும், நாட்டிற்கும் பிளவின்றி விசுவாசமாக இருக்கும் என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்” என நேற்று திங்கட்கிழமை கூச்சிங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ராஜா முகமது கூறியிருக்கிறார்.

கடந்த மார்ச் 30-ம் தேதி, ராஜா முகமது தனது படைகளையும், காவல்துறையினரையும், அரசாங்கத்திற்கும், தற்போதைய காபந்து பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கும் விசுவாசமாக இருக்கும் படி வலியுறுத்தினார்.

இதனால், ராஜா முகமதுக்கு எதிராக மூத்த அரசியல் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

முன்னாள் பிரதமரும், தற்போதைய பக்காத்தான் ஹராப்பான் கூட்டணித் தலைவருமான துன் டாக்டர் மகாதீர் முகமது, ராஜா முகமதுவின் கருத்து குறித்து கடுமையாக விமர்சித்தார்.

முன்னாள் பிலிப்பைன்ஸ் சர்வாதிகாரி பெர்டினாண்ட் மார்கோஸ், பெனிக்னோ அக்கினோ வரலாற்றை நினைவுபடுத்திய மகாதீர், அக்கினோ போல் தான் கொல்லப்பட்ட பிறகு தான் இராணுவமும், காவல்துறையும் உணர்வுக்குத் திரும்பப் போகிறது என உணர்ச்சிகரமாகத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.