Home நாடு நான் கொல்லப்பட்ட பிறகு தான் போலீசும், இராணுவமும் உணரப்போகிறதா?- மகாதீர் கேள்வி!

நான் கொல்லப்பட்ட பிறகு தான் போலீசும், இராணுவமும் உணரப்போகிறதா?- மகாதீர் கேள்வி!

1445
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு ஆதரவாக இருந்து வரும் காவல்துறை மற்றும் ஆயுதப்படைகளை, முன்னாள் பிரதமரும், பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான துன் டாக்டர் மகாதீர் முகமது கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

முன்னாள் பிலிப்பைன்ஸ் சர்வாதிகாரி பெர்டினாண்ட் மார்கோசின் கதையை நினைவுபடுத்திய மகாதீர், கடந்த 1983-ம் ஆண்டு, மார்கோஸ் தனது அரசியல் எதிரியான பெனிக்னோ அக்கினோவை கொன்ற பிறகு, அதுவரை மார்கோசுக்கு ஆதரவாக இருந்து வந்த இராணுவம் அவருக்கே எதிராகத் திரும்பியதாகக் குறிப்பிட்டார்.

இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய மகாதீர், “நான் மார்கோசைப் பற்றி நினைவு படுத்த விரும்புகிறேன். காவல்துறையும், இராணுவமும் துணை இருந்ததால் அவரால் ஒரு சர்வாதிகாரியாக உருவாக முடிந்தது.

#TamilSchoolmychoice

“ஆனால், அவர் அக்கினோவைக் கொலை செய்த பிறகு, காவல்துறையும், இராணுவமும் அவருக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடாது என முடிவெடுத்தது. அதனால் அவர் சர்வாதிகாரி என்ற நிலையில் இருந்து சரிந்தார்.

“அதேபோல், ஒருவேளை நான் உட்பட எங்களில் யாராவது கொலை செய்யப்பட்ட பிறகு தான் (மலேசியா) காவல்துறையும், இராணுவமும் உணர்வுக்குத் திரும்பப் போகிறார்களா?” என மகாதீர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மேலும், உங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நினைக்கிறீர்களா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “இந்த மனிதரால், எல்லாவற்றுக்கும் கவலைப்படுகின்றேன்” எனத் தெரிவித்தார்.

மேலும், ஆயுதப்படைத் தலைவர் ராஜா முகமது அஃபாண்டி ராஜா முகமது நூர், தமது படையை பிரதமர் தலைமையிலான அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருக்கும்படி வலியுறுத்தி வருவதாகவும் மகாதீர் கருத்துத் தெரிவித்தார்.