ஜோகூர் பாரு: அதிர்ஷ்டம் என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும் என்று எல்லாரும் வாய்பிளக்கும் அளவுக்கு ஒரு சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை ஜோகூர் தெப்ராவ் பகுதியிலுள்ள ஏயோன் (Aeon Tebrau) பல்பொருள் அங்காடியில் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களுக்கு நிகழ்ந்திருக்கிறது.
நிகழ்த்திக் காட்டியவர் வேறு யாருமல்ல! அண்மையில் துன் மகாதீருக்கு எதிராகக் கருத்துகள் கூறி, அதனால், நெட்டிசன்கள் எனப்படும் இணையத்தளவாசிகளின் கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் சம்பாதித்த ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயில் துங்கு இப்ராகிம்தான் அவர்!
இன்று மாலை ஏயோன் பல்பொருள் அங்காடிக்கு வந்த அவர் அந்த சமயத்தில் கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தவர்களிடம், “என்ன வேண்டுமானாலும் 3,000 ரிங்கிட் வரை வாங்கிக் கொள்ளுங்கள். அதற்கான பணத்தை நான் தருகிறேன்” என்று அறிவித்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து அங்கு வந்திருந்தவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. அனைவரும் வண்டிகளை நிறைக்கும் அளவுக்கு பொருட்களை வாங்கிக் குவித்திருக்கின்றனர்.
ஓர் ஒலிபெருக்கியைக் கையில் எடுத்துக் கொண்டு துங்கு இஸ்மாயில் இந்த அறிவிப்பைச் செய்திருக்கிறார்.
மாலை 6.30 மணிக்கு அங்காடிக்கு வந்த அவர் அங்கு இரவு 8.00 மணிவரை இருந்தார்.
அவர் அங்காடிக் கடையை விட்டுச் செல்லும்போது, பொதுமக்கள் வாங்கியிருந்த பொருட்களுக்கான மொத்தக் கட்டணம் ஏறத்தாழ 1 மில்லியன் ஆகியிருந்தது. அந்தப் பணத்தையும் ஜோகூர் இளவரசர் சொந்தமாகச் செலுத்தியிருக்கிறார்.
இதுகுறித்த புகைப்படங்களும், காணொளிகளும் (வீடியோ) இணையத் தளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வருகின்றன. துங்கு இஸ்மாயிலின் அதிகாரபூர்வ முகநூல் பக்கமான சவுத்தர்ன் டைகர்ஸ் ஜோகூர் பக்கத்திலும் இந்தப் புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கின்றன.