Home நாடு பூலாய்: சலாஹூடின் அயூப் மீண்டும் நூர் ஜஸ்லானை எதிர்க்கிறார்

பூலாய்: சலாஹூடின் அயூப் மீண்டும் நூர் ஜஸ்லானை எதிர்க்கிறார்

819
0
SHARE
Ad
சலாஹூடின் அயூப் – அமானா கட்சியின் துணைத் தலைவர்

ஜோகூர் பாரு – முதலில் பூலாய் நாடாளுமன்றம், பின்னர் சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்றம் என மாறி மாறி அறிவிக்கப்பட்ட அமானா கட்சியின் தேசியத் துணைத் தலைவர் சலாஹூடின் அயூப் எங்கே போட்டியிடுவார் என்பது இறுதியாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

அம்னோவின் உள்துறை துணையமைச்சர் நூர் ஜஸ்லானின் தொகுதியான ஜோகூரின் பூலாய் தொகுதியில் அவரை எதிர்த்து சலாஹூடின் மீண்டும் போட்டியிடுவார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2013 பொதுத் தேர்தலிலும் இதே பூலாய் தொகுதியில்தான் பாஸ் கட்சியின் சார்பில் சலாஹூடின் போட்டியிட்டார்.

2013-இல் சலாஹூடின் இங்கு 3,226 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாலும், நூர் ஜஸ்லானின் வாக்குப் பெரும்பான்மையைக் கணிசமாகக் குறைத்தார்.

#TamilSchoolmychoice

முன்னாள் அம்னோ தகவல் அமைச்சர் முகமட் ரஹ்மாட்டின் புதல்வரான நூர் ஜஸ்லான் (படம்) இதே பூலாய் தொகுதியில் 2008 பொதுத் தேர்தலில் 20,449 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றிருந்தார். ஆனால், சலாஹூடினின் கடுமையான போட்டியால் அந்தப் பெரும்பான்மை 3,226 ஆக குறைந்தது.

பூலாய் தொகுதியை நூர் ஜஸ்லான் 3 தவணைகளாகத் தற்காத்து வருகிறார்.

பூலாய் நாடாளுமன்றம் – 2013 பொதுத் தேர்தல் முடிவுகள்

பூலாய் தொகுதி 47 விழுக்காடு மலாய் வாக்காளர்களையும் 41 விழுக்காடு சீன வாக்காளர்களையும், 10 விழுக்காடு இந்திய வாக்காளர்களையும் 2 விழுக்காடு மற்றவர்களையும் கொண்டிருக்கிறது.

இந்த முறை பாஸ் கட்சியும் மீண்டும் இங்கே போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுவதால், பூலாய் மும்முனைப் போராட்டக் களமாக உருவெடுக்கும். தனது முன்னாள் கட்சியான பாஸ் கட்சியை எதிர்க்கும் நிலைமை சலாஹூடினுக்கு ஏற்படும்.

சட்டமன்றத்திற்கும் சலாஹூடின் போட்டி

சலாஹூடின் அதே வேளையில் சட்டமன்றத் தொகுதி ஒன்றிலும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சிம்பாங் ஜெரம் (முன்பு சுங்கை அபோங் என பெயர் கொண்டது) சட்டமன்றத்திற்கும் சலாஹூடின் போட்டியிடுவார் என அமானா கட்சி அறிவித்துள்ளது. 2013-இல் ஜசெக வென்ற பாக்ரி நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் சட்டமன்றத் தொகுதி சிம்பாங் ஜெரம் ஆகும். இங்கு கடந்த பொதுத் தேர்தலில் பாஸ் போட்டியிட்டு 3,813 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றது.

இங்கேயும் பாஸ் மீண்டும் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுவதால் சிம்பாங் ஜெரம் சட்டமன்றமும் மும்முனைப் போராட்டக் களமாகத் திகழும்.

ஜோகூர் மாநிலத்தை பக்காத்தான் கூட்டணி கைப்பற்றினால், மாநில முதலமைச்சராவார் எனப் பார்க்கப்படும் வேட்பாளர்களில் சலாஹூடினும் ஒருவராவார்.