ஜோகூர் பாரு – ஜோகூர் இளவசர் துங்கு இஸ்மாயில் துங்கு இப்ராகிம், மக்கள் வாங்கு பொருட்களுக்குக் காசு கட்டுவதாக வதந்தி ஒன்று வாட்சாப்பில் பரவியதை நம்பி, இன்று வியாழக்கிழமை ஜோகூர் பொந்தியானில் உள்ள எக்கான்சேவ் பேரங்காடியில் 1000 கணக்கானோர் குவிந்துவிட்டனர்.
இன்று காலை 10.30 மணியிலிருந்து அந்தப் பேரங்காடியில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கைகளில் இரண்டு மூன்று டிராலி வண்டிகளை வைத்துக் கொண்டு பொருட்களை எடுத்து அடுக்கினர்.
இந்நிலையில், ஜோகூர் இளவரசர் 12 மணிக்கு வருவார் என அந்த வாட்சாப் குரல் பதிவில் கூறப்பட்டிருந்ததால், அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
ஆனால், அத்தகவலில் உண்மை இல்லை என எக்கான்சேவ் நிர்வாகம் கூறி அவர்களுக்கு புரிய வைக்க முயற்சி செய்திருக்கிறது.
என்றாலும், அவர்கள் அங்கிருந்து நகர மறுக்கவே, அதன் பின்னர் காவல்துறையினர் வந்து மக்களிடம் விளக்கமளித்திருக்கின்றனர்.
இந்நிலையில், மக்கள் எடுத்து வைத்த பொருட்களையெல்லாம் மீண்டும் அந்தந்த இடங்களில் அடுக்கி வைத்து, சுத்தம் செய்யவே இரண்டு நாட்கள் ஆகும் என பொந்தியான் எக்கான்சேவ் நிர்வாகி மாஸ் இம்ரான் ஆடம் கூறியிருப்பதாக மலாய் மெயில் குறிப்பிட்டிருக்கிறது.
நேற்று புதன்கிழமை ஜோகூர் தெப்ராவ் பகுதியிலுள்ள ஏயோன் (Aeon Tebrau) பல்பொருள் அங்காடிக்குள் அதிரடியாக நுழைந்த ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயில் துங்கு இப்ராகிம், அங்கு பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஒன்றை அறிவித்தார்.
அங்கிருந்த ஒவ்வொருவரும் 3000 ரிங்கிட்டுக்கு பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம் என்றும், அதற்கான மொத்த தொகையையும் தான் கட்டிவிடுவதாகவும் ஜோகூர் இளவரசர் அறிவித்தார்.
அதன் படி, அங்கிருந்த பொதுமக்கள் 1 மில்லியன் ரிங்கிட்டுக்கு பொருட்கள் வாங்கியிருக்கின்றனர். அதனை ஜோகூர் இளவரசர் செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.