Home நாடு தெலுக் கெமாங்கிற்குப் பதிலாக மஇகாவுக்கு ஜெம்போல் அல்லது ஜெலுபு தொகுதியா?

தெலுக் கெமாங்கிற்குப் பதிலாக மஇகாவுக்கு ஜெம்போல் அல்லது ஜெலுபு தொகுதியா?

975
0
SHARE
Ad
டான்ஸ்ரீ முகமட் இசா சமாட்

போர்ட்டிக்சன் – (கூடுதல் தகவல்களுடன்) பாரம்பரியமாக மஇகா போட்டியிட்டு வந்துள்ள தெலுக் கெமாங் தொகுதியில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்னோ போட்டியிடும் என்றும் அங்கு நெகிரி செம்பிலான் தொகுதியின் முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டான்ஸ்ரீ முகமட் இசா அப்துல் சமாட் போட்டியிடுவார் என்றும் நெகிரி செம்பிலான் மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தெலுக் கெமாங் தொகுதி தற்போது போர்ட்டிக்சன் தொகுதி என பெயர் மாற்றம் கண்டுள்ளது. அண்மையில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட தொகுதி எல்லைகள் சீர்திருத்தத்தின் மூலம் இந்தப் பெயர் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

முகமட் இசா, தெலுக் கெமாங் அம்னோ தொகுதியின் தலைவருமாவார். பெல்டா போன்ற விவகாரங்களில் முகமட் இசா மீதான குறைகூறல்கள், கறைகள் இருந்தாலும் தெலுக் கெமாங் தொகுதி மலாய் வாக்காளர்களிடையேயும், பொதுவாக வாக்காளர்களிடத்திலும் முகமட் இசா மிகுந்த செல்வாக்கு கொண்டவராகப் பார்க்கப்படுகிறார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், 2008, 2013 பொதுத் தேர்தல்களில் இரண்டு முறையும் தெலுக் கெமாங் தொகுதியில் மஇகா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்த முறை அந்தத் தொகுதியை தேசிய முன்னணி வென்றெடுக்கக் கூடிய வாய்ப்பு கொண்ட வேட்பாளராக முகமட் இசா பார்க்கப்படுகிறார்.

தற்போது ஜெம்போல் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்து வரும் முகமட் இசா ‘ஸ்பாட்’ (SPAD) எனப்படும் தரைப் பொதுப் போக்குவரத்து ஆணையத்தின் தலைவராகவும் செயல்படுகிறார். பெல்டா தலைவர் பதவியிலிருந்து அவர் ஏற்கனவே விலகி விட்டார். மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் பெல்டா விவகாரத்தில் முகமட் இசாவின் இல்லத்தில் அதிரடி சோதனை வேட்டைகள் நடத்தியதைத் தொடர்ந்து அவர் அந்தப் பதவியிலிருந்து விலகினார்.

எனினும், இதுவரையில் அவர்மீது குற்றச்சாட்டுகள் எதுவும் கொண்டுவரப்படவில்லை.

தெலுக் கெமாங் தொகுதிக்குப் பதிலாக நெகிரி செம்பிலானில் உள்ள ஜெம்போல் அல்லது ஜெலுபு என இரண்டு தொகுதிகளில் ஒன்றை மஇகாவுக்கு மாற்றித் தரவும் அம்னோ ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெம்போல் தொகுதியில் முகமட் இசா நடப்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார். இந்தத் தொகுதியில் 60 விழுக்காடு மலாய் வாக்காளர்களும், 25 விழுக்காடு சீன வாக்காளர்களும் 13 விழுக்காடு இந்திய வாக்காளர்களும் மற்றவர்கள் 2 விழுக்காடும் இருக்கின்றனர்.

ஜெலுபு தொகுதியை 2013-இல் வென்ற சைனுடின் பின் இஸ்மாயில் கடந்த 2017 டிசம்பரில் காலமானார். இதனைத் தொடர்ந்து புதிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை அம்னோவிலிருந்து நியமனம் செய்வதற்கு பதிலாக, இந்தத் தொகுதியை தெலுக் கெமாங் (போர்ட்டிக்சன்) தொகுதியோடு மாற்றிக் கொள்ளவும் அம்னோ திட்டமிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெலுபு தொகுதியில் 63 விழுக்காடு மலாய் வாக்காளர்களும், 26 விழுக்காடு சீன வாக்காளர்களும், 6 விழுக்காடு இந்திய வாக்காளர்களும் மற்றவர்கள் 5 விழுக்காடும் இருக்கின்றனர்.

ஜெம்போல் மற்றும் ஜெலுபு இரண்டுமே 60 விழுக்காட்டிற்கும் அதிகமான மலாய் வாக்காளர்களைக் கொண்டிருப்பதால், இந்த இரண்டு தொகுதிகளில் ஏதாவது ஒன்று மஇகாவுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-இரா.முத்தரசன்