Home நாடு மைபிபிபி தேசிய முன்னணியில் தற்போதைக்கு நீடிக்கும்!

மைபிபிபி தேசிய முன்னணியில் தற்போதைக்கு நீடிக்கும்!

1034
0
SHARE
Ad
டான்ஸ்ரீ எம்.கேவியஸ் (கோப்புப் படம்)

கோலாலம்பூர் – மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகலில் நடைபெற்ற மைபிபிபி கட்சியின் உச்சமன்றக் கூட்டத்தைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் தற்போதைக்கு மைபிபிபி கட்சி தேசிய முன்னணியில் தொடர்ந்து நீடிக்கும் முடிவை ஏகமனதாக உச்சமன்றம் எடுத்துள்ளதாக அறிவித்தார்.

எனினும், தேசிய முன்னணியின் தலைவரும் பிரதமருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை மைபிபிபி கட்சித் தலைவர் என்ற முறையில் தான் சந்தித்து, தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளுக்கிடையிலான தொகுதிகள் பங்கீடு குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்ட பின்னர், தேசிய முன்னணியில் மைபிபிபி கட்சியின் நிலைப்பாடு குறித்த இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மைபிபிபி கட்சியைப் பொறுத்தவரை கடந்த பல ஆண்டுகளாக கேமரன் மலையில் தான் பாடுபட்டு வந்திருப்பதால், அந்தத் தொகுதியையே கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்ற தங்களின் நிலைப்பாட்டில் மாற்றம் எதுவும் இல்லை என்றும் கேவியஸ் மீண்டும் வலியுறுத்தினார்.

#TamilSchoolmychoice

சிகாம்புட் நாடாளுமன்றம் மைபிபிபி கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்திய அவர், எனினும் அந்தத் தொகுதியில் தான் போட்டியிடப்போவதில்லை என்றார்.

கட்சியின் மற்ற தலைவர்கள் யாரும் சிகாம்புட் தொகுதியில் போட்டியிட விரும்பினால் கட்சி அதுகுறித்து முடிவெடுக்கும் என்றும் கேவியஸ் தெரிவித்துள்ளார்.