Home இந்தியா பெண் நிருபரின் கன்னத்தைத் தட்டியதற்காக மன்னிப்புக் கேட்டார் தமிழக ஆளுநர்!

பெண் நிருபரின் கன்னத்தைத் தட்டியதற்காக மன்னிப்புக் கேட்டார் தமிழக ஆளுநர்!

998
0
SHARE
Ad

சென்னை – நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், லக்ஷ்மி சுப்ரமணியம் என்ற பெண் நிருபரின் கன்னத்தைத் தட்டியதற்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மன்னிப்புக் கேட்டார்.

இது குறித்து ஆளுநர் வெளியிட்டிருக்கும் மின்னஞ்சல் கடிதத்தில், “மதிப்பிற்குரிய நிருபரே, உங்களின் 18-04-2018 தேதியிட்ட கடிதத்தை மின்னஞ்சல் மூலமாகப் பெற்றேன். நேற்றைய செய்தியாளர் சந்திப்பு முடிவிற்கு வந்த போது தான் நீங்கள் கேள்வி கேட்டீர்கள். என்றாலும், அந்தக் கேள்வி நல்ல கேள்வி என்பதால் அதனைக் கருத்தில் கொண்டேன். எனவே, உங்களின் கேள்வியைப் பாராட்டும் விதமாக, எனது பெயர்த்தியாக நினைத்து உங்களின் கன்னத்தில் தட்டினேன்.

“ஒரு செய்தியாளராக, உங்களின் செயலைப் பாராட்டும் விதத்திலும், நானும் 40 ஆண்டுகள் அத்துறையில் இருந்தவன் என்ற முறையிலும் உணர்வுப்பூர்வமாக அதனைச் செய்தேன். ஆனால் எனது செயலால் நீங்கள் எவ்வளவு வருத்தப்பட்டிருக்கிறீர்கள் என்பதை உங்களது கடிதத்தின் மூலமாக உணர்ந்தேன். எனவே எனது செயலுக்காக வருந்துவதோடு, மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்” என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

சில தினங்களுக்கு முன்பு, அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான வழிக்கு அழைத்த குரல்பதிவு ஒன்று ஊடகங்களில் கசிந்தது.

அக்குரல் பதிவில், தமிழக ஆளுநரின் பெயரை நிர்மலா குறிப்பிட்டிருந்ததால்,இந்த விவகாரத்தில் ஆளுநர் மீது சந்தேகப் பார்வை திரும்பியது.

இதனையடுத்து, நேற்று செய்தியாளர் சந்திப்பை நடத்திய ஆளுநர், தமக்கும் நிர்மலா தேவிக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லையெனத் தெரிவித்தார்.

அச்செய்தியாளர் சந்திப்பின் போது தான் பெண் நிருபர் லக்‌ஷ்மியின் கன்னத்தைத் தட்டி புதிய சர்ச்சையில் சிக்கிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.