
சென்னை : தமிழ் நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டிருக்கிறார். இதுவரையில் தமிழ்நாட்டின் ஆளுநராகப் பதவி வகித்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்கிறார்.
அவருக்கு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து வழியனுப்பும் செய்தியைத் தனது முகநூலில் பின்வருமாறு பதிவிட்டார்.
“தமிழ்நாட்டில் இருந்து விடைபெற்று பஞ்சாப் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்க இருக்கும் மாண்புமிகு பன்வாரிலால் புரோகித் அவர்களை அன்புடனும் மரியாதையுடனும் வழியனுப்பி வைக்கிறோம்!
எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும் – முதலமைச்சராக ஆனபோதும் தனிப்பட்ட முறையில் என் மீது அன்புடன் பழகியவர் புரோகித் அவர்கள். குறுகிய காலம் பழகி இருந்தாலும் இனிமையான மறக்க முடியாததாக உங்கள் நட்பு அமைந்திருந்தது. உங்களது பரந்த உள்ளம் பஞ்சாப் மக்களுக்கு நன்மை பயப்பதாக அமையட்டும்.
தமிழ்நாடு தங்களை வாழ்த்தி வழியனுப்புகிறது!”
மேற்கண்டவாறு ஸ்டாலின் பதிவிட்டிருக்கிறார்.
இதற்கிடையில், காவல் துறையின் உளவுத்துறைத் தலைவராக இருந்த ஆர்.என்.ரவி தமிழ் நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
உளவுத் துறை பின்னணியைக் கொண்ட காவல் துறையின் முன்னாள் உயர் அதிகாரி தமிழ் நாடு ஆளுநராக நியமிக்கப்படுவது சந்தேகங்களை எழுப்புவதாக பல்வேறு அரசியல் தரப்புகள் தெரிவித்திருக்கின்றன.
Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal
மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal