கோலாலம்பூர், ஜனவரி 18 – உத்தாரா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் எழுந்த விவாத மோதலால் நாடு முழுக்க ஒரே நாளில் உச்ச நட்சத்திரமாகவும், நாளைய நம்பிக்கை நட்சத்திரமாகவும் மாறிவிட்ட பவானி, இந்த பிரச்சனையை இனப் பிரச்சனையாக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.
இந்த விவாதக் கருத்து மோதலின் மூலம் நாம் அனைத்து தரப்பு மக்களுக்கும் எல்லா நிலைகளிலும் இலவசக் கல்வி வழங்கும் போராட்டமாக இதனை மாற்ற வேண்டும் என்பதோடு, பல்கலைக் கழகங்களில் கருத்தரங்குகள் என்ற பெயரில் மாணவர்களை மூளைச் சலவை செய்யும் முயற்சிகளை நாம் முறியடிக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருக்கின்றார்.
“நாம் இந்தப் பிரச்சனையின் மூலம் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் நமது கல்வி முறை எப்படி இயங்குகின்றது என்பதையும், அரசு சார்பற்ற இயக்கங்கள் என்று கூறிக் கொள்பவர்களின் மூலம் மாணவர்களை எதிர்க்கட்சிகளுக்கு எதிரானவர்களாகவும், அரசாங்கத்தை எதிர்த்து போராடுபவர்களுக்கு எதிராகவும் மாற்றுவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளை நாம் உணர வேண்டும் என்பதுதான். மாறாக இதனை ஒரு இனப் பிரச்சனையாக நாம் பார்க்கவும் கூடாது மாற்றவும் கூடாது” என்றும் இரண்டாம் ஆண்டு சட்டத் துறை மாணவியுமான பவானி கூறியுள்ளார்.
“எனக்கு ஷரிபாவிடமிருந்து மன்னிப்பு வேண்டாம்”
தன்னை மட்டம் தட்டிப் பேசிய ஷரிபாவிடம் இருந்து தான் மன்னிப்பு எதனையும் எதிர்பார்க்கவில்லை என்றும் பவானி தெரிவித்திருக்கின்றார்.
“நான் கேட்பதெல்லாம் பேச்சுரிமைதான். பல்கலைக் கழக விரிவுரையாளர்கள், படித்தவர்கள் என்பவர்களுக்கு மட்டும் என்றில்லாமல், எல்லா மலேசியர்களுக்கும் இனம், மொழி, வயது, மதம் வித்தியாசமின்றி நமது அரசியல் அமைப்பு சாசனம் நமக்கு வழங்கியுள்ள உரிமைகளின்படி நமக்கு பேச்சுரிமை வழங்கப்பட வேண்டும்” என்றும் பவானி வலியுறுத்தியுள்ளார்.
ஒரே நாளில் யூ டியூப் ஒளிநாடாவின் மூலம் உச்சத்திற்கு போய்விட்டதைப் பற்றி கேட்டபோது, தனக்கு கிடைத்த இத்தகைய அபரிதமான ஆதரவினால் தனக்கு மேலும் பணிவான குண உணர்வு ஏற்பட்டிருக்கின்றது என்றும் பவானி தெரிவித்திருக்கின்றார்.
“அன்று அந்த கருத்தரங்கு மேடையில் நான் தனியாளாக அவமானப்படுத்தப்பட்டேன். ஆனால் இன்று எனக்குப் பின்னால் ஆயிரக்கணக்கானோர் அணிவகுத்து எனக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றார்கள்” என்றார் பவானி.