Home நாடு சுங்கை பூலோ: சிவராசா – பிரகாஷ் ராவ் இரண்டாவது தடவையாக மோதுகின்றனர்!

சுங்கை பூலோ: சிவராசா – பிரகாஷ் ராவ் இரண்டாவது தடவையாக மோதுகின்றனர்!

1049
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கடந்த 2013 பொதுத் தேர்தலில் சுபாங் நாடாளுமன்றத் தொகுதியில் மஇகா-தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட பிரகாஷ் ராவ் மற்றும் பிகேஆர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் ஆர்.சிவராசா (படம்) இருவரும் தற்போது சுங்கை பூலோ எனப் பெயர் மாற்றம் கண்டுள்ள அதே தொகுதியில் மீண்டும் மோதவிருக்கின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட மஇகாவின் வேட்பாளர் பட்டியல்படி பிரகாஷ் ராவ் சுங்கை பூலோ தொகுதியில் போட்டியிடுகிறார்.

நேற்று திங்கட்கிழமை செல்லியல் ஊடகம் தொடர்பு கொண்டபோது பேசிய ஆர்.சிவராசா, சுங்கை பூலோ தொகுதியில் தான் போட்டியிடுவது உறுதி என்றும் அதற்கான பச்சைக் கொடியை பிகேஆர் தலைமைத்துவம் காட்டி விட்டதாகவும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

எனினும் முறையான அறிவிப்பு பிகேஆர் தலைமைத்துவமிடமிருந்து விரைவில் வெளியாகும் என்றும் சிவராசா கூறினார்.

A-Prakash-Rao
பிரகாஷ் ராவ்

“கடந்த சில நாட்களாக சுங்கை பூலோ தொகுதி மஇகாவிடம் இருந்து அம்னோவுக்கு மாற்றித் தரப்படும் என்ற ஆரூடங்கள் நிலவி வந்தன. அதன் காரணமாக எனது நிலைப்பாட்டையும் உறுதியாகத் தெரிவிக்காமல் இருந்து வந்தேன். தற்போது சுங்கை பூலோவில் மீண்டும் மஇகா வேட்பாளர் நிறுத்தப்படுவதைத் தொடர்ந்து, நான் போட்டியிடுவதை உறுதிப்படுத்துகிறேன்” என்றும் சிவராசா தெரிவித்தார்.

சுபாங் தொகுதி மறுசீரமைக்கப்பட்டு, அங்கிருந்து பெரிய எண்ணிக்கையிலான சீன வாக்காளர்கள் பக்கத்துத் தொகுதிகளுக்கு மாற்றப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, அதனால் பாதிப்புகள் ஏதும் ஏற்படுமா எனக் கேட்கப்பட்டபோது, “ முதலில் நானும் அவ்வாறு கருதினேன். ஆனால், இப்போது நகர்ப்புற மலாய் வாக்காளர்கள் பெருமளவில் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியை ஆதரிக்கின்றனர். சுங்கை பூலோ தொகுதியும் ஏராளமான மலாய் வாக்காளர்களைக் கொண்டிருப்பதால் அங்கு மீண்டும் வெல்ல முடியும் என நம்பிக்கை கொண்டுள்ளேன்” என்றும் சிவராசா தெரிவித்தார்.

சுபாங் – 2013 பொதுத் தேர்தல் முடிவுகள்

2008 முதல் சுபாங் தொகுதியைத் தற்காத்து வரும் சிவராசா 2013-இல் அந்தத் தொகுதியில் 26,719 வாக்குகள் பெரும்பான்மையில் மஇகா-தேசிய முன்னணி வேட்பாளர் பிரகாஷ் ராவைத் தோற்கடித்தார்.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தொகுதி எல்லை சீர்திருத்தங்களைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் சுபாங் தொகுதியிலிருந்து பக்கத்துத் தொகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சுபாங் தொகுதி, சுங்கை பூலோ தொகுதி என்றும் பெயர் மாற்றம் கண்டுள்ளது.