கோலாலம்பூர் – சிலாங்கூரில் போட்டியிடும் பிகேஆர் மற்றும் மஇகா வேட்பாளர்களின் பட்டியல்படி 3 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 3 சட்டமன்றத் தொகுதிகளிலும் மஇகா மற்றும் பிகேஆர் கட்சிகள் நேரடியாக மோதுகின்றன.
காப்பார் தொகுதியில் மஇகா-தேசிய முன்னணி வேட்பாளராகப் போட்டியிடும் டத்தோ மோகனா முனியாண்டியை எதிர்த்து பிகேஆர் கட்சியின் சார்பாக அப்துல்லா சானி நிறுத்தப்பட்டுள்ளார்.
சிலாங்கூரில் மஇகா போட்டியிடும் மற்றொரு நாடாளுமன்றத் தொகுதியான உலுசிலாங்கூரில் கல்வி துணை அமைச்சர் டத்தோ பி.கமலநாதனை எதிர்த்து லியோவ் ஹிசியாட் ஹூய், பிகேஆர் கட்சியின் சார்பாக போட்டியிடுகிறார்.
மஇகாவின் பிரகாஷ் ராவ் போட்டியிடும் சுங்கை பூலோ தொகுதியில் பிகேஆர் கட்சியின் சார்பில் ஆர்.சிவராசா களமிறங்குகிறார்.
மஇகா-பிகேஆர் மோதும் சட்டமன்றங்கள்
சிலாங்கூரில் மஇகா மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுகிறது. அந்த 3 தொகுதிகளிலும் மஇகா பிகேஆர் கட்சியின் வேட்பாளர்களைச் சந்திக்கிறது.
செந்தோசா சட்டமன்றத்தில் (முன்பு ஸ்ரீ அண்டலாஸ்) மஇகாவின் டத்தோ ஆர்.எஸ்.மணியம் போட்டியிட, அவரை எதிர்த்து பிகேஆர் சார்பில் குணராஜ் ஜோர்ஜ் நிறுத்தப்படுகிறார்.
மற்றொரு சட்டமன்றம் சுங்கை துவாவில் (முன்பு பத்து கேவ்ஸ்) மஇகா சார்பில் என்.இரவிச்சந்திரன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பிகேஆர் சார்பில் அமிருடின் ஷாரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
இஜோக் தொகுதியிலும் பிகேஆர் கட்சியே மஇகாவுக்கு எதிராகப் போட்டியிடுகிறது. பிகேஆர் சார்பில் இங்கு இட்ரிஸ் அகமட் போட்டியிட, அவரை எதிர்க்கப் போவது மஇகாவின் கே.பார்த்திபன் ஆவார்.