Home தேர்தல்-14 அம்னோ சட்டபூர்வமானதா? நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகிறது!

அம்னோ சட்டபூர்வமானதா? நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகிறது!

898
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அம்னோ சட்டபூர்வமானதல்ல என்றும், அதன் காரணமாக அந்தக் கட்சியின் பதிவு இயல்பாகவே இரத்து செய்யப்பட வேண்டும் என்றும் 16 அம்னோ உறுப்பினர்கள் சங்கப் பதிவிலாகாவுக்கு எதிராகத் தொடுத்த சீராய்வு மனு மீதிலான வழக்கின் விசாரணை நேற்று வியாழக்கிழமை (26 ஏப்ரல்) கோலாலம்பூர் நீதிமன்றத்தில் தொடர்ந்தது.

சங்கப் பதிவகத்திற்கு எதிராக 16 அம்னோ உறுப்பினர்கள் இந்த வழக்கைத் தொடுத்ததைத் தொடர்ந்து அந்த 16 பேரும், அம்னோவிலிருந்து நீக்கப்பட்டதாக, அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் அறிவித்திருந்தார். இதன் காரணமாக தெங்கு அட்னான் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றையும் இந்த 16 பேர்களின் சார்பாக, அவர்களின் வழக்கறிஞர் ஹானிப் கத்ரி அப்துல்லா நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார்.

இருதரப்பு வாதங்களையும் செவிமெடுத்த நீதிமன்றம், அம்னோ சார்பில் தனது தரப்பு விளக்கங்களை வழங்க முன்வந்த அம்னோவின் வழக்கறிஞர் முகமட் ஹஃபாரிசாம் ஹருண், தனது வாதங்களைச் சமர்ப்பிக்க முடியாது என்று கூறி அவரை நீதிமன்றத்திலிருந்து வெளியேற்றியது.

#TamilSchoolmychoice

16 அம்னோ உறுப்பினர்கள் சங்கப் பதிவிலாகாவுக்கு எதிராக வழக்கு தொடுத்திருக்கின்றனர் என்றும் இது அம்னோவுக்கு எதிராக தொடுக்கப்படும் ‘எக்ஸ் பார்ட்டே’ (ex parte application) எனப்படும் ஒருதரப்பு சார்பு வழக்கு என்பதால் அம்னோவின் வழக்கறிஞர் தனது வாதங்களை முன்வைக்க முடியாது என்பதுதான் தனது முடிவுக்கான காரணம் என்றும் நீதிமன்ற நீதிபதி கமாலுடின் முகமட் சைட் தெரிவித்தார்.

சங்கப் பதிவிலாகாவுக்கு எதிராக 16 பேர்களும் வழக்கைத் தொடர்ந்து நடத்துவதற்கு அனுமதிப்பதா இல்லையா என்ற தீர்ப்பை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை காலையில் வழங்கும் என்றும் நீதிபதி நேற்றைய வழக்கின் முடிவில் அறிவித்தார்.