கோலாலம்பூர் – கடந்த சில நாட்களாக ஊடகங்களில் முக்கியத்துவத்தைப் பெற்று வருபவர் டான்ஸ்ரீ கேவியஸ் (படம்). முதலில் கேமரன் மலைத் தொகுதியில் அவர் வேட்பாளர் இல்லை – அந்தத் தொகுதி மஇகாவுடையதுதான் – என தேசிய முன்னணி அறிவித்ததைத் தொடர்ந்து, மஇகா இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ சிவராஜ் கேமரன் மலை நாடாளுமன்ற வேட்பாளராக பெயர் குறிப்பிடப்பட்டார்.
அத்துடன் கேவியஸ் எழுப்பியிருந்த அரசியல் வெப்பம் தணியும் என நினைத்திருந்த காலகட்டத்தில், அதிரடியாக அவர் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டார் என்ற அறிவிப்பு வெளிவந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஆனால், தான் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகி விட்டதாக ஒரு கடிதம் எழுதி அந்தக் கடிதத்தையும் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டார் கேவியஸ்.
ஆனால், மைபிபிபி கட்சியின் உச்சமன்றக் கூட்டத்தைக் கூட்டி கேவியசைத் தலைவர் பதவியிலிருந்து விலக்கும் முடிவை அறிவித்த பின்னர், பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மைபிபிபி தலைவர்கள், தாங்கள் முடிவு எடுக்கும் வரை கேவியசின் பதவி விலகல் கடிதம் எதனையும் தாங்கள் பெறவில்லை என்றும், மாறாக அவர் கட்சியிலிருந்தே தூக்கி எறியப்பட்டார் என்றும் அறிவித்தனர்.
இந்த சம்பவங்களைத் தொடர்ந்து, கேமரன் மலை நாடாளுமன்றத்திற்கு சுயேச்சை வேட்பாளராக கேவியஸ் போட்டியிடுவார் என்ற தகவல்கள் பரவி வருகின்றன.
யார் என்ன சொன்னாலும், யார் அனுமதிக்காவிட்டாலும், நான் கேமரன் மலையில் போட்டியிடுவது உறுதி என ஏற்கனவே பல தடவைகள் கேவியஸ் அறிவித்திருக்கிறார்.
இந்நிலையில் எதிர்வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கலின்போது, கேமரன் மலையில் போட்டியிட கேவியஸ் வேட்புமனுத் தாக்கல் செய்வாரா என்ற பரபரப்பு சில தரப்புகளில் ஏற்பட்டுள்ளது.
எனினும், மலேசியா கேஸெட் (Malaysia Gazette) என்ற இணைய ஊடகம் நேற்று புதன்கிழமை (25 ஏப்ரல் 2018) வெளியிட்ட செய்தியின்படி, அந்த ஊடகத்திடம் பேசிய கேவியஸ், “பொதுத் தேர்தல் முடியும்வரை நான் வாயைத் திறக்கப் போவதில்லை. தற்போதைக்கு முக்கியம் தேசிய முன்னணி எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெல்வதுதான். ஒரு சிலர் எதிர்பார்ப்பதுபோல், நான் கேமரன் மலையில் சுயேச்சையாகப் போட்டியிட மைபிபிபியின் தேசியத் தலைவர் பதவியை இராஜினாமா செய்யவில்லை” என்றும் கூறியுள்ளார்.
தொடர்ந்து, தேசிய முன்னணிக்கும், பிரதமர் நஜிப்புக்கும் தனது ஆதரவை வழங்கி வரப் போவதாகவும் கேவியஸ் தெரிவித்திருக்கிறார்.