Home நாடு 25 ஆண்டுகால தலைமைத்துவத்தை ஒரே நாளில் இழந்த கேவியஸ்!

25 ஆண்டுகால தலைமைத்துவத்தை ஒரே நாளில் இழந்த கேவியஸ்!

1629
0
SHARE
Ad
டான்ஸ்ரீ எம்.கேவியஸ்

கோலாலம்பூர் – “நானொன்று நினைத்தேன்! அவனொன்று நினைத்தான்” என்ற பாடல் வரிகள்,

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும், குறிப்பாக அரசியல் சம்பவங்களின்போது நினைவுகூரப்படும் காலத்தால் அழியாத அற்புத பதிவு!

இன்று புதன்கிழமை (25 ஏப்ரல் 2018) காலை முதல் அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் மைபிபிபி கட்சியின் தலைவராக கடந்த 25 ஆண்டுகள் கோலோச்சி வந்த டான்ஸ்ரீ கேவியசின் அரசியல் முடிவையும் எடுத்துக் காட்டுவதாக அமைந்தன.

#TamilSchoolmychoice

கேவியஸ் கடந்த ஓரிரண்டு ஆண்டுகளாக வகுத்து வந்த திட்டங்கள், வியூகங்கள் அனைத்தும், அவர் நினைத்தபடி நடந்திருந்தால், எதிர்வரும் ஏப்ரல் 29-ஆம் தேதி அவருக்கு ஒரு கோலாகலமான கொண்டாட்டத்தை அவரது மைபிபிபி கட்சியினர் நடத்திக் காட்டியிருப்பர்.

ஆம்! ஏப்ரல் 29 – அவரது 64-வது பிறந்த நாள்!

அவரது கோரிக்கைகள் ஏற்கப்பட்டிருந்தால், ஏப்ரல் 28-ஆம் தேதி கேமரன் மலை தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினராக அவர் வேட்புமனுத் தாக்கல் செய்திருப்பார். அடுத்த நாள் அவரது பிறந்த நாள் கேமரன் மலையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டிருக்கும்.

ஆனால், இன்று ஒரே நாளில் அவரது அத்தனை அரசியல் பதவிகளும் கட்சியிலிருந்து பறிக்கப்பட்டு – அவரது கட்சியின் உச்சமன்றக் குழுவாலேயே – அதுவும் காலமெல்லாம் அவருடைய தீவிர விசுவாசிகள் எனக் கருத்தப்பட்டவர்களாலேயே அவர் கட்சியிலிருந்து தூக்கியெறியப்பட்டிருப்பது – மலேசியாவில் அரசியல் பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்றுதான் கூற வேண்டும்.

25 ஆண்டுகால தலைமைத்துவம் ஒரே நாளில் முடிவுக்கு வந்தது

1993-இல் அரசியல் போர்மேகங்கள் கட்சியை சூழ்ந்திருந்த காலகட்டத்தில் மைபிபிபியின் (அப்போது பிபிபி மட்டும்தான்) தேசியத் தலைவராகப் பொறுப்பேற்ற அவர் கால ஓட்டத்தில், கட்சியை ஓரளவுக்கு வலிமையான கட்சியாக உருமாற்றினார்.

அவர் தேசியத் தலைவரான பின்னர், மஇகாவில் நடந்த உட்கட்சிப் போராட்டங்களால், பலர் மஇகாவிலிருந்து விலகி, பிபிபி கட்சியில் இணையத் தொடங்கினர்.

பல மஇகா கிளைகள் புதியவர்களுக்கும், இளைஞர்களுக்கும் வாய்ப்பு கொடுக்காமல், தங்களின் கதவுகளைச் சாத்திக் கொண்ட காலகட்டத்தில், தேசிய முன்னணி வழியாக அரசியல் பணியாற்ற நினைத்த ஆயிரக்கணக்கான இளைய சமுதாயத்தினருக்கு புகலிடமாக பிபிபி திகழ்ந்தது.

ஆனால், பிபிபிக்குக் கிடைத்த வரவேற்பைக் கொண்டு கட்சியைப் பலப்படுத்தாமல், தன்னை மட்டுமே முன்னிறுத்தி பலப்படுத்திக் கொள்ள முனைந்த கேவியஸ், தனக்கு ஆதரவாக, விசுவாசமாகச் செயல்பட்ட ஒரு சிறு குழுவினரைக் கொண்டு மட்டுமே கட்சியை வழிநடத்தி வந்தார். இதன் மூலம் கட்சியின் முகமாக – மூளையாக – அவர் மட்டுமே செயல்படுகிறார் என்பது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டது.

இடையில் பிபிபி கட்சியில் உருமாற்றம் செய்கிறேன் என அந்தக் கட்சியின் பெயரை மைபிபிபி என்று மாற்றியமைத்தார் கேவியஸ்.

பலரைக் கட்சியிலிருந்து நீக்கியவர் – இன்று நீக்கப்பட்டார்

Murugiah T. Datoகடந்த 25 ஆண்டுகளில் தனக்கு எதிரானவர்கள் எனக் காரணம் காட்டி ஏராளமானோரை கேவியஸ் கட்சியிலிருந்தும் விலக்கியிருக்கிறார்.

அவர்களில் குறிப்பிடத்தக்கவர், டத்தோ பி.முருகையா (படம்)!

பிபிபி-யின் மூலமாக செனட்டர் – துணையமைச்சர் எனப் பதவிகள் வகித்து துடிப்புடன் செயல்பட்டவர் ஒரு கட்டத்தில் கேவியசால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, தற்போது மஇகாவில் ஐக்கியமாகியிருக்கிறார்!

கடந்த சில மாதங்களாக கேவியஸ் பேசி வந்தவை – எடுத்த முடிவுகள் – எழுதிய கடிதங்கள் – என அனைத்துமே இன்று அவருக்கே எதிராக விஸ்வரூபம் எடுத்து, அவரது அரசியல் வாழ்க்கையையே முடித்து விட்டன.

கேமரன் மலை மஇகாவுக்குத்தான் என்ற தேசிய முன்னணி முடிவை நாகரிகமாக ஏற்றுக் கொண்டு, சிகாம்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட விரும்பிய டத்தோ லோகா பாலாமோகனை வாழ்த்தி அனுப்பியிருந்தால் – கேவியசுக்கு இன்று கட்சியில் ஏற்பட்ட முடிவு நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை.

மாறாக, “லோகா பாலா மோகன் சிகாம்புட்டில் போட்டியிடுவதை நானும் கட்சியும் அங்கீகரிக்கவில்லை” என அவர் எடுத்த முடிவு – விடுத்த அறிக்கை – இறுதியில் அவருக்கே எதிராகத் திரும்பி விட்டது.

அந்த அறிக்கைதான் – முடிவுதான் – கட்சியின் மூத்த, முக்கிய உறுப்பினர்களை ஓரணியில் திரளச் செய்து கட்சியின் உச்சமன்றக் கூட்டத்தைக் கூட்டச் செய்து, தங்களின் 25 ஆண்டுகாலத் தலைவரைத் தூக்கியெறியும் முடிவையும் எடுக்க வைத்தது என்கின்றனர் மைபிபிபி கட்சியினர்.

நடந்திருக்கும் சம்பவங்களை ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது, இனியும் மைபிபிபி கட்சியில் கேவியசின் ஆதிக்கமோ, ஊடுருவலோ தொடர்வதற்கு வாய்ப்பில்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிவாகத் தெரிகிறது என்கின்றனர் அந்தக் கட்சியின் உட்கட்சி வட்டாரங்கள்.

அரசியல் என்பது கண்ணாடி போன்று எவ்வளவு சீக்கிரத்தில் உடைந்து நொறுங்கக் கூடியது என்பதற்கான உதாரணம், கேவியசின் இன்றைய முடிவு!

ஒரு தலைவன், தனது ஆதிக்கத்தை – அதிகாரத்தை – அளவுக்கதிகமாக நீட்டித்தால் – அளவுக்கு மீறிய அதீத நம்பிக்கையோடு கூடுதலாக வளைத்தால் – என்னவாகும் என்பதற்கு, கேவியசின் அரசியல் வாழ்க்கை ஒரு பாடமாகும்.

“நானொன்று நினைத்தேன்! அவனொன்று நினைத்தான்!” என்ற பாடல் வரிகளைத்தான் மீண்டும் நினைவுபடுத்திப் பார்க்க வேண்டியதிருக்கிறது.

-இரா.முத்தரசன்