Home தேர்தல்-14 சரவணனை எதிர்க்கப் போகும் பெர்சாத்து வேட்பாளர் யார்? ராய்ஸ் ஹூசேன் விலகினார்!

சரவணனை எதிர்க்கப் போகும் பெர்சாத்து வேட்பாளர் யார்? ராய்ஸ் ஹூசேன் விலகினார்!

1703
0
SHARE
Ad
கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி மஇகாவின் தாப்பா வேட்பாளராக சரவணன் அறிவிக்கப்பட்டபோது…

தாப்பா – பேராக் மாநிலத்திலுள்ள தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் மஇகா-தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோஸ்ரீ எம்.சரவணனை எதிர்த்து களம் காணப் போகும் பெர்சாத்து கட்சியின் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கு முன் வெளிவந்த தகவல்களின்படி பெர்சாத்து கட்சியின் வியூகப் பிரிவுக்குத் தலைமை வகிக்கும் ராய்ஸ் ஹூசேன் சரவணனை எதிர்த்துப் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், நேற்று வியாழக்கிழமை ஊடகங்களில் வெளிவந்திருக்கும் செய்திகளின்படி, இந்தப் பொதுத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என ராய்ஸ் ஹூசேன் அறிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

“தாப்பாவில் போட்டியிட்டால் அந்தத் தொகுதியின் வெற்றிக்காக மட்டுமே நான் பாடுபடுவேன். ஆனால் போட்டியிலிருந்து ஒதுங்கிக் கொண்டால், மற்ற எல்லா தொகுதிகளின் வெற்றிக்காகவும் என்னால் பாடுபட முடியும்” என ராய்ஸ் கூறியதாக பிரி மலேசியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

ராய்ஸ் ஹூசேன் முகமட் அரிப்

தாப்பாவில் உள்ள உள்ளூர் பெர்சாத்து கட்சியினர் வெளியிலிருந்து கொண்டு வந்து நிறுத்தப்படும் ராய்ஸ் ஹூசேனின் வேட்பு மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால்தான் ராய்ஸ் தாப்பாவில் போட்டியிடவில்லை என்றும் கூறப்படுகிறது.

ராய்ஸ் சிலாங்கூரிலுள்ள கிள்ளான் தொகுதியின் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.

ஏற்கனவே, தாப்பா தொகுதியில் மீண்டும் வெல்வதற்கு சரவணனுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் நிலவுகின்றன.

இந்நிலையில், பெர்சாத்து கட்சி தனது வேட்பாளரை அறிவிக்காமல் இழுத்தடிப்பதால், தாப்பாவில் சரவணனுக்கு சாதகமான சூழல் நிலவுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2013-இல் தாப்பாவில் போட்டியிட்ட பிகேஆர் கட்சியின் கே.வசந்த குமார் 7,927 வாக்குகள் வித்தியாசத்தில் சரவணனிடம் தோல்வி கண்டார்.

இந்த முறை தாப்பா பெர்சாத்து கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. மலாய் வாக்காளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருப்பதால் இந்தத் தொகுதி பெர்சாத்துவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

தாப்பாவில் 47 விழுக்காடு மலாய் வாக்காளர்களும், 32 விழுக்காடு சீன வாக்காளர்களும் 20 விழுக்காடு இந்திய வாக்காளர்களும் இருக்கின்றனர்.