கோலாலம்பூர் – துன் டாக்டர் மகாதீர் முகமது மீண்டும் ஆட்சிக்கு வந்து மலேசியாவை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்ல வேண்டுமென நகைச்சுவை நடிகர் விவேக் டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து நடிகர் விவேக் தனது டுவிட்டரில் வெளியிட்டிருக்கும் கருத்தில், “எனக்கு மலேசிய அரசியலைப் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் டாக்டர் துன் மகாதீர் முகமது தனது 92 (29) வயதில் மீண்டும் ஆட்சியில் அமர வேண்டுமென நான் விரும்புகிறேன். நவீன மலேசியாவின் தந்தையாக இருந்து வரும் மகாதீர் இளைஞர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருந்து வருகிறார்” எனத் தெரிவித்திருக்கிறார்.
நகைச்சுவை நடிகராக இருந்து கொண்டே சமூக விழிப்புணர்வுப் பிரச்சாரங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் நடிகர் விவேக்.
மரம் நடுவதை தனது வாழ்நாள் சேவையாக வைத்து கொண்டிருப்பவர். காலஞ்சென்ற விஞ்ஞானியும், முன்னாள் இந்திய அதிபருமான அப்துல் கலாமை பல முறைச் சந்தித்துப் பேட்டி கண்டவர்.
அந்த வகையில், நடிகர் விவேக், துன் டாக்டர் மகாதீர் முகமதுவையும் அண்மையில் சந்தித்து அவரைப் பேட்டி கண்டார்.
அதன் பின்னர், ஒருமுறை மகாதீரின் காணொளி ஒன்றை தனது டுவிட்டரில் பதிவு செய்து, 92 வயதிலும் மகாதீரின் நடை கம்பீரமாக இருப்பதாகத் தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த மகாதீர், விவேக் தனது வயதைத் தவறாகக் குறிப்பிட்டிருக்கிறார் என்றும், தனக்கு 29 வயது தான் ஆகிறது என்றும் நகைச்சுவையாகத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.