கோலாலம்பூர் – நகைச்சுவை நடிகராக இருந்து கொண்டே சமூக விழிப்புணர்வுப் பிரச்சாரங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் நடிகர் விவேக்.
மரம் நடுவதை தனது வாழ்நாள் சேவையாக வைத்து கொண்டிருப்பவர். காலஞ்சென்ற விஞ்ஞானியும், முன்னாள் இந்திய அதிபருமான அப்துல் கலாமை பல முறைச் சந்தித்துப் பேட்டி கண்டவர்.
இந்நிலையில், நடிகர் விவேக், மலேசியாவின் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீரை அண்மையில் சந்தித்து அவரைப் பேட்டி கண்டிருக்கிறார்.
14 ஆண்டுகளுக்குப் பிறகு தனது 92-வது வயதில் மகாதீர் மீண்டும் அரசியலுக்கு வருவது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார் விவேக்.
அதற்குப் பதிலளித்திருக்கும் மகாதீர், பெரும்பாலான இளைஞர்களின் ஆதரவு இருப்பதால் தான் அரசியலுக்கு மீண்டும் வருவதாகப் பதிலளித்திருக்கிறார்.
மேலும், தனது ரோல் மாடல் நெல்சன் மண்டேலா, ரஷியாவின் பீட்டர் என்றும் மகாதீர் குறிப்பிட்டிருக்கிறார்.
92 வயதிலும் இன்னும் திடகாத்திரமாக இருப்பதன் இரகசியம் என்னவென்று விவேக் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்திருக்கும் மகாதீர், “உணவு ருசியாக இருக்கும் போது அதை அதிகமாக உட்கொள்வதை நிறுத்திக் கொள்” என்று தனது அன்னை கற்றுக் கொடுத்த பாடம் தான் இந்த வயதிலும் தான் ஆரோக்கியமாக இருப்பதற்குக் காரணம் என்றும் மகாதீர் தெரிவித்திருக்கிறார்.
மேலும், அரசியல்வாதியாக , ஒரு பிரச்சினையை எவ்வாறு கையாளுவீர்கள் என்று விவேக் எழுப்பிய கேள்விக்கு, நான் அடிப்படையில் ஒரு டாக்டர். நோய்க்கு மருந்து கொடுப்பதை விட, நோய் உருவாவதற்கான காரணத்தைக் கண்டறிந்து மருந்து கொடுப்பேன். அதையே தான் அரசியலிலும் பின்பற்றுகிறேன் என்று மகாதீர் தெரிவித்திருக்கிறார்.