கோலாலம்பூர் – ஓரினச்சேர்க்கை வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று சுங்கை பூலோ சிறையில் அடைக்கப்பட்டிருந்த அன்வார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தோள்பட்டை அறுவை சிகிச்சைக்காக கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன் பின்னர், மேல் சிகிச்சைக்காக செராஸ் மறுவாழ்வு மைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்வார், தற்போது வரை அங்கு தான் ஓய்வு எடுத்து வருகின்றார். இதனிடையே, பிகேஆர் கட்சிக்கு, பொதுத்தேர்தல் தொடர்பான ஆலோசனைகளையும் அங்கிருந்த படியே வழங்கி வருகின்றார்.
இது குறித்து ‘தி ஸ்டார்’ இணையதளத்தில் அரசியல் ஆய்வாளர் ஒருவர் சந்தேகத்துடன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
14-வது பொதுத்தேர்தலில் தமது கட்சிக்கு ஆலோசனை வழங்கும் வகையில் அங்கு அவருக்கு சகல வசதிகளையும் தேசிய முன்னணி செய்து கொடுத்திருப்பது ஏன்? என அந்த அரசியல் ஆய்வாளர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மேலும், பிகேஆர் கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள், அன்வாரைச் சந்திக்கும் வகையில், சிறை நிர்வாகம், அன்வாருக்கு செராஸ் மறுவாழ்வு மையத்திலேயே தங்கியிருக்க அனுமதி வழங்கியிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
“எந்த அரசாங்கத்தை அவர் (அன்வார்) தூக்கி எறிய முயற்சிக்கிறாரோ? அது அவருக்கு மருத்துவமனையில் இருந்தபடியே கட்சியை நிர்வகிக்க வசதிகளைச் செய்து கொடுத்திருக்கிறது.
“பிகேஆரில் உலா வரும் தகவல்களின் படி, பிகேஆரில் என்ன நடக்கிறது? என்ன திட்டமிடுகிறார்கள்? என்பதை அறிந்து கொள்ள, அரசாங்கம் இந்த வழியைப் பின்பற்றுவதாகக் கூறுகின்றார்கள்.
“எனினும், பிகேஆர் கட்சியின் முக்கியத் தலைவர்கள் மற்றும் தேசிய முன்னணி தலைவர்களுக்கு இடையில் சில அரசியல் உடன்பாடுகள் இருப்பதாக ஒரு கருத்து நிலவி வருவது தான் இதில் கவனிக்கப்பட வேண்டியது.
“இவையெல்லாம் பாரிசானுக்கும், பிகேஆர் தலைவர்களுக்கும் இடையில் உண்மையில் என்ன நடக்கிறது என்பது குறித்து கேள்விகளை எழுப்பியிருக்கிறது. உண்மையில் அவர்கள் எதிரிகளா? அல்லது எதிரி நண்பர்களா?.
“உண்மையில் அவர்கள் ஒருவரையொருவர் கவிழ்க்க நினைத்தால், பிகேஆர் தலைவர்கள் முக்கியமான நேரத்தில் இருக்கும் போது, அன்வாருக்கு எதற்காக சிறப்பு சிகிச்சை?” என அந்த அரசியல் ஆய்வாளர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.