Home நாடு மறதியா? அலட்சியமா? – வாய்ப்பை இழந்த 2 பிகேஆர் இந்திய வேட்பாளர்கள்!

மறதியா? அலட்சியமா? – வாய்ப்பை இழந்த 2 பிகேஆர் இந்திய வேட்பாளர்கள்!

2421
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நாடெங்கிலும் இன்று சனிக்கிழமை 14-வது பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில், அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் தேசிய முன்னணி, பக்காத்தான் ஹராப்பான், பாஸ் கூட்டணியைச் சேர்ந்த வேட்பாளர்கள் அனைவரும் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.

அவர்களில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிட்ட பிகேஆர் கட்சியைச் சேர்ந்த இரு இந்திய வேட்பாளர்கள் கடைசி நேரத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியாமல் வாய்ப்பை இழந்தனர்.

#TamilSchoolmychoice

அதற்குக் காரணம், மறதியா? அலட்சியமா? அல்லது சதிச்செயலா? என நட்பு ஊடகங்களில் தற்போது ஒரு விவாதமே நடைபெற்று வருகின்றது.

அடையாள அட்டையில் முகவரியை மாற்றாத சிவமலர் கணபதி

புக்கிட் மெலாவத்தி சட்டமன்றத் தொகுதியில் பிகேஆர் சார்பில் போட்டியிடவிருந்த வழக்கறிஞர் சிவமலர் கணபதி பகாங் மாநிலத்தில் பிறந்தவர். இந்நிலையில், அவரது அடையாள அட்டையில் பகாங் மாநில முகவரி இருந்ததால், சிலாங்கூர் சட்டமன்றத்தில் போட்டியிட அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

கடைசி நேரத்தில் சிவமலர் கணபதிக்குப் பதிலாக ஜவாரியா சுல்கிப்ளி வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

வேட்பாளர் அட்டையை எடுக்காத ஸ்ரீராம் சின்னசாமி

நெகிரி செம்பிலான் மாநிலத்திலுள்ள ரந்தாவ் சட்டமன்றத்தில் அம்மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் ஹசானை எதிர்த்துப் போட்டியிட வந்த பிகேஆர் வேட்பாளர் டாக்டர் ஸ்ரீராம் சின்னசாமியிடம் வேட்பாளருக்கான அட்டை இல்லாததால் அவருக்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில், ரந்தாவ் தொகுதியில் முகமட் ஹசானை எதிர்த்துப் போட்டியிட வேட்பாளர் இல்லாத்தால், அவர் போட்டியின்றி வெற்றி பெற்றிருக்கிறார்.

இதனிடையே, ஸ்ரீராம் சின்னசாமியை காவல்துறையினர் வேட்புமனுத் தாக்கல் மையத்திற்குள் அனுமதிக்கவில்லை என பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லி டுவிட்டரில் குற்றம் சாட்டியிருக்கிறார்.

அதற்குப் பதிலளித்திருக்கும் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர், “உங்கள் வேட்பாளரைக் கேளுங்கள்.. ஏன் அவர் வேட்பாளருக்கான அட்டைக்கு விண்ணப்பிக்கவில்லை?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இதனிடையே, பிகேஆர் கட்சி சார்பில் வாங்சா மாஜூ தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரான டான் இயூ கியூ அடையாள அட்டையை வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டதால், வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

அதன் பின்னர், சரியான நேரத்தில் அவரது உதவியாளர் அடையாள அட்டையைக் கொண்டு வந்து சேர்த்ததால், டான் இயூ கியூ வேட்புமனுத் தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.