Home தேர்தல்-14 தேர்தல் 14: இரு வேறு அணிகளில் நிக் அசிஸ் மகன்கள் போட்டி!

தேர்தல் 14: இரு வேறு அணிகளில் நிக் அசிஸ் மகன்கள் போட்டி!

970
0
SHARE
Ad

கோத்தா பாரு, கிளந்தான் – பாஸ் கட்சியின் முன்னாள் சமயத் தலைவர் மறைந்த நிக் அசிசின் இரு மகன்களும், 14-வது பொதுத்தேர்தலில், எதிர்க்கட்சி உட்பட இரு வேறு அணிகளில் போட்டியிடுகின்றனர்.

நேற்று சனிக்கிழமை நடைபெற்ற 14-வது பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலில், நிக் அசிசின் இரண்டாவது மகன் நிக் ஓமார், எதிர்கட்சியான பிகேஆர் சார்பில், கிளந்தான் மாநிலம் செம்பாகா சட்டமன்றத்தில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். செம்பாகா சட்டமன்றம் பாஸ் கட்சியின் வலுவான தொகுதிகளில் ஒன்றாகும்.
கடந்த 2013-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் நிக் அசிஸ் அத்தொகுதியில் , 6,500 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றிருந்தார்.

இதனிடையே, நிக் ஓமாரின் இளைய மகன் நிக் முகமது அப்து, பாசோக் நாடாளுமன்றத் தொகுதியில், பாஸ் வேட்பாளராக தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

பாசோக் தொகுதியில், அம்னோ வேட்பாளர் டாக்டர் அவாங் அடே ஹுசைனும், பிகேஆர் வேட்பாளர் முகமது சுல்கிப்ளி சகாரியாவும் போட்டியிட, தற்போது அங்கு மும்முனைப் போட்டி உருவாகியிருக்கிறது.

#TamilSchoolmychoice

இதனிடையே, பிகேஆர் சார்பில் நிக் ஓமார் போட்டியிடுவதால், பாஸ் அவரை நேற்று சனிக்கிழமை கட்சியிலிருந்து நீக்கம் செய்தது.

பாஸ் பொதுச்செயலாளர் தாகியுடின் ஹசான் கூறுகையில், “நிக் ஓமாரின் முடிவு கட்சிக்கு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் அவரது முடிவு இத்தனை நாள் கட்சிக்காக கடுமையாகப் போராடிய அவரது தந்தையின் முயற்சிகளுக்கு எதிராக உள்ளது. அவர் (நிக் ஓமார்) பாஸ் கட்சியில் இருக்க வேண்டும் என்று தான் அவரது தாயார் விரும்புகின்றார்” என்று தெரிவித்திருக்கிறார்.

நிக் ஓமார் அமனா கட்சியில் தான் இணைந்து தேர்தலில் போட்டியிட விரும்பியதாகவும், ஆனால் அவரது தாயார், சபாரியா இஷாக், அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

செம்பாகா சட்டமன்ற தொகுதியில் நிக் ஓமார் பிகேஆர் சார்பில் போட்டியிடுவதால் அங்கு மும்முனைப் போட்டி உருவாகியிருக்கிறது. தேசிய முன்னணி சார்பில் முகமது பரீசும், பாஸ் சார்பில் அகமது பாத்தான் மாஹ்முட்டும் நிக் ஓமாரை எதிர்த்துப் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.