
தாப்பா – செல்லியல் ஊடகம் சார்பாக தொகுதி வலம் வந்து நேரடியாக அந்தந்த தொகுதிகளின் கள நிலவரத்தை அறிந்து கொண்டு, வாசகர்களுக்கும் அதனை எடுத்துக் கூறும் நமது முயற்சியில் அடுத்ததாக நாம் தரையிறங்கியது பேராக் மாநிலத்தின் தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில்!
தீபகற்ப மலேசியாவின் தென்பகுதியிலிருந்து, நாட்டின் புகழ்பெற்ற குளுகுளு பிரதேசமான கேமரன் மலைக்கு செல்வதற்கு நீங்கள் தாப்பா நகரைக் கடந்துதான் செல்ல வேண்டும்.
பொதுத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு பல மாதங்களுக்கு முன்பிருந்தே யாரைக் கேட்டாலும் மஇகா மீண்டும் வெல்லக் கூடிய தொகுதிகளின் பட்டியலில் முதன்மையாக எப்போதும் இடம் பெற்றிருந்தது தாப்பா.
அதற்குக் காரணம் அந்தத் தொகுதியை கடந்த 2 தவணைகளாக வெற்றிகரமாகத் தற்காத்து வந்திருக்கும் டத்தோஸ்ரீ எம்.சரவணன்.
“தாப்பா பாதுகாப்பானதோ இல்லையோ, அதற்காக இந்தப் பொதுத் தேர்தலில் நாம் சற்றும் கண்ணயர்ந்து விடக் கூடாது. மலாய்க்கார வாக்காளர்களிடையே ஏற்பட்டிருக்கும் சில மனமாற்றங்களை நாம் அப்படியே புறந்தள்ளி விடக் கூடாது. கடுமையாகப் பாடுபட வேண்டும்” என தனது தேர்தல் பிரச்சாரக் குழுவிடம் ஆணித்தரமாக வலியுறுத்துகிறார் சரவணன்.

அதற்கேற்ப, தாப்பா நகரில் மகாத்மா காந்தி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது மஇகா தேர்தல் நடவடிக்கை மையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (1 மே 2018) அவரை நாம் சந்தித்தபோது இரவு 11.00 மணிக்கு மேல் இருக்கும்.
அந்த மண்டபத்தில் நடுநாயகமாக பிரம்மாண்டமாக எழுந்து நிற்கும் அவரது தேர்தல் பிரச்சாரப் பதாகை நம்மை வரவேற்கிறது!
பிரச்சாரங்களை முடித்துக் கொண்டு, தேர்தல் பணிகளை மீள்பார்வையிட அவர் தனது தேர்தல் பணிக் குழுவினரோடு, விவாதத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் அவரைச் சந்தித்தோம். கண்களில் உறக்கத்தை இழந்த அயர்ச்சியும், உடல் மொழியில் சற்றே சோர்வும் தென்பட்டாலும், அதையும் மீறி வேகத்தோடு, தொடர்ந்து தனது கருத்துப் பரிமாற்றங்களைத் தனது குழுவினருடன் தொடர்கிறார் சரவணன்.
விவாதங்கள், தனிப்பட்ட சந்திப்புகள் நள்ளிரவையும் தாண்டி பின்னிரவு 1.00 மணி வரை அவரது அலுவலகத்தில் நீள்கிறது.
சரவணனின் கடந்த கால உழைப்பினால்தான் தாப்பா பாதுகாப்பான தொகுதி

“தாப்பா மஇகாவுக்கு பாதுகாப்பான தொகுதி என்பது வெறும் வாய் வார்த்தைகளல்ல. வெறும் முழக்கத்துக்காக உருவாக்கப்பட்ட வாசகமுமல்ல. சரவணனின் இதுபோன்ற கடந்த கால உழைப்புதான் தாப்பாவை இன்று மஇகாவுக்குப் பாதுகாப்பான தொகுதியாக மக்களிடையே ஒரு தோற்றத்தை ஏற்படுத்தித் தந்திருக்கிறது” என்கின்றனர் தொகுதியில் அவருக்காகப் பணியாற்றும் உள்ளூர் தேர்தல் குழுவினர்.
அதற்கேற்ப, சரவணன் தாப்பாவிலேயே தனக்கென ஒரு தனிச் செயலாளரை நியமித்து அவர் மூலம் தனது தொகுதிக்கான கடமைகளைத் தொடர்ந்து ஆற்றி வந்திருக்கிறார்.
தாப்பாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு, பின்னர் அங்கிருந்து காரில் பறந்து வந்து கோலாலம்பூரில் மற்றொரு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, மீண்டும் தாப்பாவுக்குப் பறந்து செல்லும் சம்பவங்கள் சரவணனின் அரசியல் வாழ்க்கையில் மிகவும் சாதாரணம்.
2018 பொதுத் தேர்தலில் 47,128 வாக்காளர்களைக் கொண்ட தாப்பா தொகுதியில் இம்முறை நிலவுவது மும்முனைப் போட்டி. சரவணனை எதிர்த்து பெர்சாத்து கட்சியும், பாஸ் கட்சியும் போட்டியிடுகின்றன.
47 விழுக்காடு மலாய் வாக்காளர்கள், 26 விழுக்காடு சீன வாக்காளர்கள், 13 விழுக்காடு இந்திய வாக்காளர்களைக் கொண்டுள்ள இந்தத் தொகுதியில் மற்றவர்கள் பூர்வ குடியினர் போன்றோர் மற்ற தொகுதிகளை விட அதிகமாக 13 விழுக்காடு உள்ளனர்.
கடந்த 2013 பொதுத் தேர்தலில் 7,927 வாக்குகள் பெரும்பான்மையில் சரவணன் வெற்றி பெற்ற தொகுதி இது!
“இந்த முறை இந்திய வாக்காளர்களிடையே எனக்கு மிகப் பெரிய ஆதரவு இருப்பதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. அதே வேளையில் பூர்வ குடி மக்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்து வந்திருப்பதன் மூலம் அவர்களில் பெரும்பான்மையோரின் ஆதரவும் எனக்கு இருக்கிறது. இந்த அடிப்படை பலத்தைக் கொண்டு அம்னோவின் மூலம் வரக்கூடிய மலாய் வாக்குகளையும், மசீச மற்றும் என்னுடைய பணிகளின் காரணமாக கிடைக்கக்கூடிய சீன சமூகத்தின் ஆதரவையும் இணைத்து மீண்டும் வெல்ல முடியும் என நம்புகிறேன். அதே வேளையில் மலாய் வாக்காளர்களிடையே எழுந்திருக்கும் அதிருப்தி அலைகளையும் நான் உணர்ந்திருக்கிறேன். அதையும் சரிசெய்ய எனது பிரச்சாரங்களின் மூலம் – எனது நேரடி பேச்சுவார்த்தைகளின் மூலம் – முயற்சி செய்து வருகிறேன். கடந்த காலங்களில் இந்தத் தொகுதியில் நான் கொட்டியிருக்கும் உழைப்பும், சேவையும் என்னைக் கைவிடாது என்றும் நம்புகிறேன்” என உறுதியுடனும், நம்பிக்கையுடனும் கூறுகிறார் சரவணன்.