Home நாடு தொழிலாளர் தினம்: டாக்டர் சுப்ராவின் பங்களிப்பை நினைவு கூர்கிறார் ஜோகூர் தோட்டத் தொழிலாளர்கள் சங்கத் தலைவர்...

தொழிலாளர் தினம்: டாக்டர் சுப்ராவின் பங்களிப்பை நினைவு கூர்கிறார் ஜோகூர் தோட்டத் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் முருகப் பெருமாள்!

1284
0
SHARE
Ad

ஜோகூர் பாரு – இன்று கொண்டாடப்படும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அனைத்து தொழிலாளர்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ள ஜோகூர் மாநில தோட்டத் தொழிலாளர் சங்கத் தலைவர் முருகப் பெருமாள், முன்னாள் மனித வள ஆற்றல் அமைச்சராகப் பணியாற்றிய காலகட்டத்தில் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் தொழிலாளர்களின் மேம்பாட்டுக்காக மேற்கொண்ட முயற்சிகளையும் தனது வாழ்த்துச் செய்தியின் நினைவு கூர்ந்துள்ளார்.

“சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வடைந்து இரண்டாவது தவணையில், 2008-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர்  மனித வள அமைச்சராகப் பதவி ஏற்றார் டாக்டர் சுப்ரா. அக்காலம் மலேசிய இந்தியர்களுக்கு குறிப்பாக தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு பொற்காலம் என்றுதான் கூறவேண்டும்” என்று சுட்டிக் காட்டியிருக்கும் முருகப் பெருமாள்,

“தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம் பல ஆண்டுகளாக மாத வருமானத்தை அதிகரிக்க  போராடி வந்தது. எங்கள் போராட்டத்திற்கு ஒரு விடிவு காலமாக டத்தோஸ்ரீ ச.சுப்பிரமணியம் அவர்கள் 2011ஆம் ஆண்டு குறைந்த பட்ச மாத வருமானத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இந்தச் சட்டம் முதலாளிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையில் 2012ஆம் அமலாக்கம் கண்டது” என்றும் நினைவுபடுத்தினார்.

முருகப் பெருமாள்
#TamilSchoolmychoice

இச்சட்டத்தின் வாயிலாக தோட்டத் தொழிலாளர்களுக்கும் மற்ற தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச சம்பளம் 900 வெள்ளியாக நிர்ணயிக்கப்பட்டது என்று குறிப்பிட்ட முருகப் பெருமாள், இத்துடன் ஓய்வுபெறும் வயதை 55-லிருந்து 60-க்கு டாக்டர் சுப்ரா உயர்த்தினார் என்றும் தனது தொழிலாளர் தின செய்தியில்  தெரிவித்திருக்கிறார்.

தொழிலாளர்களுக்கான நலத் திட்டமான சொக்சோ திட்டத்தில் பல மாறுதல்களைக் கொண்டு வந்து தொழிலாளர் நலனைப் பாதுகாத்தார் என்றும் முருகப் பெருமாள் மேலும் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

மனித வள அமைச்சராக, குறைந்தபட்ச ஊதியத் திட்ட அறிமுகத்தின்போது…

“தொழிலாளர் தினத்தில் இதையெல்லாம் நினைவில் வைத்து சிகாமாட் வாழ் இந்திய மக்கள் அனைவரும் டாக்டர் சுப்ராவுக்கு இத்தேர்தலில் முழு ஆதரவு தரவேண்டும்” என்றும் முருகப் பெருமாள் கேட்டுக் கொண்டுள்ளார்.

மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் மனித வள அமைச்சராகப் பணியாற்றிய காலகட்டத்தில் தொழிலாளர்கள் வளர்ச்சிக்கு செய்த சாதனைகள், பணிகளில் சில:-

B40 எனப்படும் குறைந்த வருமானம் பெற்ற மலேசியர்களுக்கு உதவும் வகையில் அவர் அமலாக்கம் செய்த குறைந்த பட்ச வருமானச் சட்டத்தின் வாயிலாக  அடித்தட்டு மலேசிய மக்கள் பாதுகாப்பும் உணர்வையும் வருமான உயர்வையும் ஒருசேரப்  பெற்றனர். குறிப்பாக இந்திய தொழிலாளர் சமூகம் இந்த சட்டத்தின் வாயிலாக குறிப்பிடத்தக்க பலன்களை அடைந்தனர்.

யுனிவர்சிட்டி உத்தாரா மேற்கொண்ட ஆய்வில் குறைந்தபட்ச வருமானச் சட்டத்தின் பிரதிபலனாக ஏறக்குறைய 2 லட்சம் இந்தியத் தொழிலாளர் சமூகம் மாதாந்திர சம்பள உயர்வு கண்டுள்ளனர் என்பது தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆய்வின்படி நாட்டில் உள்ள மூவினங்களை ஒப்பிடுகையில் இந்திய சமூகம் தான் இந்த சட்டத்தின் அமலாக்கத்தின்படி அதிக அளவில் நன்மை அடைந்ததாகத் தெரிய வருகின்றது. காரணம் சீனர் சமூகம் தனித் தொழில் செய்யும் சமூகமாகவும், வணிகர்களாக இருக்கும் சமூகமாகவும் திகழ்கின்றது. மலாய்க்காரர் சமூகம் அரசாங்க பணிகளிலும், விவசாயிகளாகவும் மீனவர்களாகவும் இருந்துவருகிறது.

UPM எனப்படும் யுனிவர்சிடி புத்ரா மலேசியா பல்கலைக் கழகத்தின் ஆய்வின்படி இந்தியத் தொழிலாளர் சமூகம் இந்த சட்டத்தின் அமலாக்கத்தின் வழி இதுவரை ஏறத்தாழ 2 பில்லியன் ரிங்கிட்டுக்கும் கூடுதலான வருமானம் ஈட்டியுள்ளதற்கு குறைந்த பட்ச ஊதியத் திட்ட அமுலாக்கத்திற்கு டாக்டர் சுப்ரா மேற்கொண்ட முயற்சிகளே காரணம்.

டாக்டர் சுப்ரா மனிதவள அமைச்சராக இருந்தபோது தனியார் துறையில் இருக்கும் தொழிலாளர்களுக்கான ஓய்வுகாலத்தை 55 வயதிலிருந்து 60 வயதாக நீட்டித்தார். இதன் காரணமாக திடகாத்திரமான பல இந்தியர்கள் மேலும் 5 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து உழைக்கவும், கூடுதல் வருமானம் பெறும் வாய்ப்பும் ஏற்படுத்தித் தந்தார்.

சொக்சோவின் வழி தொழிலாளர் பாதுகாப்புக்கும், நலனுக்கும் பல திட்டங்களை அமலாக்கம் செய்து தொழிலாளர் நலன்களைப் பாதுகாத்தார்.