Home தேர்தல்-14 தேர்தல் 14: பக்காத்தானுக்காக தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கும் டாயிம் சைனுடின்

தேர்தல் 14: பக்காத்தானுக்காக தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கும் டாயிம் சைனுடின்

771
0
SHARE
Ad
டாயிம் சைனுடின் – கோப்புப் படம்

கோலாலம்பூர் – துன் மகாதீர் முகமதுவின் ஆட்சிக் காலத்தின் போது அவருக்கு அணுக்கமான நண்பராகவும், அரசியல் வானில் என்றும் துணை நிற்கும் தூணாகவும் உலா வந்தவர் துன் டாயிம் சைனுடின்.

அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்ட இவர் மகாதீருக்காக மீண்டும் 14-வது பொதுத் தேர்தல் பிரச்சாரக் களத்தில் குதித்துள்ளார்.

கெடாவைச் சேர்ந்த – வழக்கறிஞர் பின்னணியைக் கொண்ட இவர் – தொடக்க காலத்தில் வணிகத்தில் – குறிப்பாக வீடமைப்பு மேம்பாட்டில் ஈடுபட்ட முதல் கட்ட பூமிபுத்ரா வணிகராவார். இன்றைக்கு தலைநகர் கம்போங் பண்டான் வட்டாரத்தில் தாமான் மலூரி என அழைக்கப்படும் வீடமைப்புப் பகுதி இவரால்தான் உருவாக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

பின்னர், அம்னோ, தேசிய முன்னணியின் பொருளாளர், நிதியமைச்சர் என பல பொறுப்புகள் வகித்த இவர், லங்காவி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.

மகாதீரின் ஆதிக்கம் ஓய்ந்த பின்னர் அரசியலில் இருந்தும் ஒதுங்கிக் கொண்ட டாயிம் சைனுடின் தற்போது, மகாதீருக்காகவும், பக்காத்தான் கூட்டணிக்காகவும் தொடர்ந்து பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.

டாயிம் சைனுடின் அம்னோவில் பழைய நண்பர்கள் மற்றும் கட்சியினரிடையே இன்னும் ஆதிக்கம் கொண்டவர் எனக் கருதப்படுவதால், அவரது பிரச்சாரம் தேசிய முன்னணிக்கு எதிரான மற்றொரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

லெம்பா பந்தாய் பிகேஆர்-பக்காத்தான் வேட்பாளர் ஃபாமி பாட்சில்

சில நாட்களுக்கு முன்னர் லங்காவியில் கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொண்டு பக்காத்தானுக்கு ஆதரவாகக் கருத்துகள் தெரிவித்த டைம் சைனுடின், புதன்கிழமை (2 மே 2018) லெம்பா பந்தாய் தொகுதியில் போட்டியிடும் ஃபாமி பாட்சிலுக்கு ஆதரவாகப் பிரச்சாரங்களை மேற்கொண்டார்.

அம்னோவை பொதுத் தேர்தலில் வீழ்த்த வேண்டும் என வாக்காளர்களைக் கேட்டுக் கொண்ட டைம், ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு எதிராகவும் பேசினார். பொய்ச் செய்திகள் சட்டம், தொகுதி எல்லை சீர்திருத்தங்கள் ஆகியவை காரணமாகத்தான் தான் தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததாக டைம் மேலும் தெரிவித்தார்.

பக்காத்தான் கூட்டணி வெற்றி பெற்றால் அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டை மறுசீரமைப்பு செய்யும் என்றும் டாயிம் உறுதியளித்தார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (4 மே 2018) துன் மகாதீர், ரபிடா அசிஸ் ஆகியோருடன் இணைந்து, டைம் சைனுடின் மலாக்காவுக்கு வருகை தந்து தனது பிரச்சாரங்களை மேற்கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.