கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தலில், கடற்படையைச் சேர்ந்த வீரர்கள், அவர்களுக்குப் பிடித்தவர்களுக்கு வாக்களிக்க முழு சுதந்திரம் இருப்பதாகத் தான் கூறிய கருத்து அரசியலாக்கப்பட்டுவிட்டதாக கடற்படைத் தலைவர் அகமட் கமாருல்ஜமான் அகமட் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
“வெட்கப்பட வேண்டிய சில பொறுப்பற்ற தரப்புகள், கப்பற்படை ஃபேஸ்புக்கில் நான் கூறிய கருத்தைத் திரித்து, அதனை பொய்யான செய்தியாக்கிவிட்டன” என இன்று வெள்ளிக்கிழமை மதியம் அகமட் கமாருல்ஜமான் டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.
நேற்று வியாழக்கிழமை அகமட் கமாருல்ஜமான் கூறிய கருத்தைச் சுட்டிக் காட்டிய செய்தி இணையதளம் ஒன்று, அது பக்காத்தான் ஹராப்பானுக்குச் சாதகமாக இருப்பதாகத் தெரிவித்தது.
இந்நிலையில், அச்செய்தியின் படத்தைச் சுட்டிக் காட்டியிருக்கும் அகமட் கமாருல்ஜமான், அது பொய்யான தகவல் எனத் தெரிவித்திருக்கிறார்.