Home தேர்தல்-14 “சேற்று நீரைக் குடிநீராகப் பயன்படுத்தும் அவலம்” – எல்மினா தோட்ட மக்கள் புகார்

“சேற்று நீரைக் குடிநீராகப் பயன்படுத்தும் அவலம்” – எல்மினா தோட்ட மக்கள் புகார்

903
0
SHARE
Ad
எல்மீனா தோட்ட மக்கள் அருந்தும் குடிநீரின் நிலைமையைக் காட்டுகிறார் சிவராஜன்

சுபாங் ஜெயா – கடந்த 6 மாதங்களாக, அழுக்கு நீரை அருந்தி உயிர்வாழும் சுங்கை பூலோ, பாயா ஜாராஸ், எல்மினா தோட்டத் தொழிலாளர்கள் 20 பேர், இன்று வெள்ளிக்கிழமை (4 மே 2018) காலை சுபாங் ஜெயா ஆள்பல இலாகாவில் புகார் அளித்தனர்.

சைம் டார்பி எல்மினா டெவலப்மென்ட் சென்.பெர். நிறுவனம் மேற்கொண்டுவரும் மேம்பாட்டுத் திட்டத்தின் காரணமாக, அத்தோட்டத்து குடிநீர் குளம் அழுக்கடைந்து, சுமார் 100 ஆண்டு காலமாக அங்கு வசித்து வரும் தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதித்துள்ளது.

இந்த வட்டாரம் சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆள்பல அமைச்சில் சிவராஜன் ஏற்பாட்டில் புகார் செய்யும் பொதுமக்கள்
#TamilSchoolmychoice

இப்பிரச்சனை சில ஆண்டுகளாக நீடித்து வருகின்றது என அத்தொழிலாளர் குழுவுக்குத் தலைமையேற்றிருந்த மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) தலைமைச் செயலாளர் சிவராஜன் ஆறுமுகம் தெரிவித்தார்.

சிவராஜன் பிஎஸ்எம் கட்சியின் வேட்பாளராக சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியின் கீழ்வரும் கோத்தா டாமன்சாரா சட்டமன்றத்திற்குப் போட்டியிடுகின்றார்.

“இந்தப் பிரச்சனையைத் தோட்டத் தொழிலாளர்கள் சில ஆண்டுகளாக எதிர்நோக்கி வருகின்றனர், இதைப் பற்றி பல புகார்கள் செய்யப்பட்ட நிலையில், கடந்த 2016-ல் சைம் டார்பி எல்மினா நிறுவனம் குடிநீர் குளத்தைச் சுத்தம் செய்துள்ளது. ஆனால், 6 மாதங்களுக்குப் பின்னர் குளம் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பிவிட்டது,” என சிவராஜன் தெரிவித்தார்.

“கடந்த 6 மாதங்களாக, குளத்து நீர் அதிக மாசடைந்து, சேற்று நீராக வீடுகளுக்கு வழங்கப்படுகிறது எனத் தொழிலாளர்கள் எங்களிடம் புகார் அளித்தனர். அதன் காரணமாகவே, இன்று காலை ஆள்பல இலாகாவில் இந்தப் புகாரை செய்துள்ளோம்,” என்றார் அவர்.

எல்மினா தோட்டத் தொழிலாளர்களின் புகாரை பெற்றுக்கொண்ட, ஆள்பல இலாகாவின் துணை நிர்வாகி மாஸ்பூபா பாஜுரி, தொழிலாளர்கள் தினமும் குடித்துவரும் நீரின் நிலை அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார்.

“நான் இந்த நீரில் குளிக்கக்கூட மாட்டேன், நீங்கள் எப்படி இதைக் குடிக்கிறீர்கள்?” என அவர் கேள்வி எழுப்பினார்.
எதிர்வரும் திங்கள் அல்லது செவ்வாய்க் கிழமை எல்மினா தோட்டத்திற்குச் சென்று, தோட்ட நிர்வாகிகளை நேரில் சந்தித்து, இப்பிரச்சனைக்கு தீர்வு காணவுள்ளதாக அவர் உறுதி அளித்தார்.

மேலும், தொழிலாளர்கள் குடியிருப்புக்கு அருகிலேயே அரசாங்கத்தின் ‘சபாஷ்’ நீர் நிறுவனக் குழாய்கள் இருந்தும், அதனைப் பயன்படுத்த தடை விதித்த தோட்ட நிர்வாகத்தின் செயல் அத்துமீறியது எனவும் மாஸ்பூபா கூறினார்.

“கடந்த டிசம்பர் 2017-ல் ‘சபாஷ்’ நிறுவனம் நீர் குழாய்களைத் தொழிலாளர் குடியிருப்புக்கு அருகில் அமைத்துள்ளது. ஆனால், அந்நீரைத் தோட்டத் தொழிலாளர்கள் பயன்படுத்தக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

“தோட்ட நிர்வாகிகள், சைம் டர்பி மேம்பாட்டு நிறுவனத்தார் மற்றும் தோட்டத்தில் செம்பனை மரம் வெட்டும் இந்தோனேசியத் தொழிலாளர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனத் தோட்ட நிர்வாகம் கூறியுள்ளது,” என சிவராஜன் விளக்கமளித்தார்.

கடந்த சில ஆண்டுகளாக, சைம் டர்பி நிறுவனத்திடம் வீட்டுரிமை கேட்டுப் போராடிவரும் எல்மினா தோட்டத் தொழிலாளர்கள் இந்தக் குடிநீர் பிரச்சனையை எதிர்நோக்கி வருகின்றனர்.

மே, 2-ம் தேதியன்று, கோத்தா டாமான்சாரா சட்டமன்றத் தொகுதியின் பி.எஸ்.எம். வேட்பாளருமான சிவராஜன் ஆறுமுகம், சுங்கை பூலோ நாடாளுமன்ற பி.எஸ்.எம். வேட்பாளர் ஜேக்-உடன் அத்தோட்டத்து மக்களைச் சந்தித்து இப்பிரச்சனைக்குத் தீர்வுகாண தேவையான நடவடிக்கைகளை எடுக்க உறுதியளித்தார்.

அதன் தொடர்ச்சியாகவே, இன்று சுபாங் ஜெயா ஆள்பல இலாகாவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.