காராக் – 2018-ஆம் ஆண்டில், பகாங் மாநிலத்திலுள்ள அனைத்து யுபிஎஸ்ஆர் தேர்வு எழுதும் 6-ஆம் ஆண்டு மாணவர்களுக்கும், தமிழ் மொழி பாடத்தில் அவர்களுக்கு உதவும் நோக்கில் தயாரிக்கப்பட்ட ‘தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி’ நூல்களை ஓசை அறவாரியம் இலவசமாக வழங்கிய நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை 4 மே 2018-ஆம் நாள் காராக் தமிழ்ப் பள்ளியில் நடைபெற்றது.
பகாங் மாநில தமிழ்ப் பள்ளிகளின் அமைப்பாளர் திருமதி வாசுகியின் ஒத்துழைப்புடனும், காராக் தமிழ்ப் பள்ளியின் தலைமையாசிரியர் திரு மணிமுத்துவின் வழிகாட்டுதலோடும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.


ஓசை அறவாரியத்தின் தலைவரும், மஇகா மத்திய செயலவை உறுப்பினருமான டத்தோ சுந்தர் சுப்பிரமணியம் பகாங் மாநிலம் முழுமையிலும் உள்ள யுபிஎஸ்ஆர் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு, தனது ஓசை அறவாரியம் அமைப்பின் மூலம் RM9.90 அடக்க விலை கொண்ட இந்த நூலை பகாங் மாநில 6-ஆம் ஆண்டு மாணவர்களுக்கு இலவசமாக வழங்க முன்வந்துள்ளார்.
கடந்த ஆண்டு இந்த நூலின் 2017 பதிப்பை கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு ஓசை அறவாரியம் இலவசமாக வழங்கியது.
மஇகா பகாங் மாநிலத் தலைவரும், காராக் நகரை உள்ளடக்கிய சபாய் சட்டமன்றத் தொகுதிக்கான தேசிய முன்னணி-மஇகா வேட்பாளருமான டத்தோ ஆர்.குணசேகரன் ஓசை அறவாரியம் சார்பாக இந்த நூல்களை நிகழ்ச்சிக்கு வந்திருந்த பகாங் மாநிலத்திலுள்ள தமிழ்ப் பள்ளிகளின் பிரதிநிதிகளிடம் எடுத்து வழங்கினார்.


இந்த நிகழ்ச்சியில் மஇகா பெந்தோங் தொகுதியின் உதவித் தலைவர் சிவலிங்கம் சின்னத்தம்பி, காராக் தமிழ்ப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சரவணன், பகாங் தமிழ்ப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மன்றத் தலைவர் குணம் சர்க்கம், மஇகா தாமான் பெர்மாய் கிளைத் தலைவர் சுப்பையா ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
யுபிஎஸ்ஆர் தமிழ்மொழி தேர்வு வழிகாட்டி நூல்
இந்த நூலின் முதல் பதிப்பு கடந்த 2017-ஆம் ஆண்டும் நாடு முழுக்க பல்வேறு நன்கொடையாளர்கள், ஆதரவாளர்களின் உதவியோடு யுபிஎஸ்ஆர் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டது.
இந்த ஆண்டும் இந்த நூல் பல புதிய மாற்றங்களுடன், கூடுதல் தகவல்களுடன், மேம்படுத்தப்பட்ட பதிப்பாக வெளியிடப்பட்டு நாடு முழுமையிலும் உள்ள யுபிஎஸ்ஆர் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு கட்டம் கட்டமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது.
அதைத் தொடர்ந்து பகாங் மாநிலத்திலுள்ள மற்ற தமிழ்ப் பள்ளிகளுக்கு இந்த நூலை வழங்கும் நிகழ்ச்சிதான் கடந்த வெள்ளிக்கிழமை மே 4-ஆம் தேதி காராக் தமிழ்ப் பள்ளியில் நடைபெற்றது.