
தானா ரத்தா – கேமரன் மலையிலுள்ள 8 தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் யுபிஎஸ்ஆர் 6-ஆம் ஆண்டு மாணவர்களுக்கு, தமிழ் மொழி பாடத்தில் அவர்களுக்கு உதவும் நோக்கில் தயாரிக்கப்பட்ட ‘தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி’ நூல்களை ஓசை அறவாரியம் இலவசமாக வழங்கிய நிகழ்ச்சி கடந்த புதன்கிழமை 2 மே 2018-ஆம் நாள் கேமரன் மலை தானா ரத்தா தமிழ்ப் பள்ளியில் நடைபெற்றது.
‘வி ஷைன் கிரியேஷன்ஸ்’ (V Shine Creations) என்ற நிறுவனம் பதிப்பித்திருக்கும் இந்த ‘யுபிஎஸ்ஆர் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி’ நூலை விக்னேஸ்வரி சாம்பசிவம் எழுதியிருக்கிறார். 6 மாதிரி கேள்வித் தாள்கள் மற்றும் அதற்கான விடைகளுடன் யுபிஎஸ்ஆர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒரு பயிற்சி நூலாக உதவும் நோக்கிலும் இந்த நூல் அமைந்திருக்கிறது.
இந்த நூலின் முதல் பதிப்பு கடந்த 2017-ஆம் ஆண்டும் நாடு முழுக்க பல்வேறு நன்கொடையாளர்கள், ஆதரவாளர்களின் உதவியோடு யுபிஎஸ்ஆர் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டது.
இந்த ஆண்டும் இந்த நூல் பல புதிய மாற்றங்களுடன், கூடுதல் தகவல்களுடன், மேம்படுத்தப்பட்ட பதிப்பாக வெளியிடப்பட்டு நாடு முழுமையிலும் உள்ள யுபிஎஸ்ஆர் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு கட்டம் கட்டமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது.

ஓசை அறவாரியத்தின் தலைவரும், மஇகா மத்திய செயலவை உறுப்பினருமான டத்தோ சுந்தர் சுப்பிரமணியம் பகாங் மாநிலம் முழுமையிலும் உள்ள யுபிஎஸ்ஆர் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு, தனது ஓசை அறவாரியம் அமைப்பின் மூலம் இந்த நூலை இலவசமாக வழங்க முன்வந்துள்ளார். கடந்த ஆண்டு இந்த நூலின் 2017 பதிப்பை கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு ஓசை அறவாரியம் இலவசமாக வழங்கியது.
அந்த வகையில் முதல் கட்டமாக இந்த நூல்களை கேமரன் மலையிலுள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி, பகாங் மாநில தமிழ்ப் பள்ளிகளின் அமைப்பாளர் திருமதி வாசுகி அவர்களின் ஒத்துழைப்போடு, தானா ரத்தா தமிழ்ப் பள்ளியில், அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு ரிச்சர்ட் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

மஇகா கேமரன் மலை தொகுதி தலைவர் சிங்கமுத்து, மஇகா கிளைத் தலைவர் ரமேஷ் செங்கோடன் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.
கேமரன் மலை தமிழ்ப் பள்ளிகளின் பிரதிநிதிகளுக்கு டத்தோ சுந்தர் இந்த நூல்களை எடுத்து வழங்கிய நிகழ்ச்சியில் மஇகா இளைஞர் பகுதித் தலைவரும், கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிடுபவருமான டத்தோ சிவராஜ் சந்திரனும் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய சிவராஜ், கடந்த 9 மாதங்களாக கேமரன் மலையில் தேர்தல் பணிகள் ஆற்றியிருப்பதன் காரணமாக, கேமரன் மலையிலுள்ள தமிழ்ப் பள்ளிகளின் பிரச்சனைகளைத் தான் நன்கு அறிந்திருப்பதாகவும், கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றால், இங்குள்ள தமிழ்ப் பள்ளிகளின் பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண உதவி புரிவதாகவும் உறுதியளித்தார்.
