Home தேர்தல்-14 தேர்தல்-14: முக்கியத்துவத்தை இழக்கும் தொலைக்காட்சி! மாறும் காட்சி ஊடகங்கள்!

தேர்தல்-14: முக்கியத்துவத்தை இழக்கும் தொலைக்காட்சி! மாறும் காட்சி ஊடகங்கள்!

1482
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மே 9 பொதுத் தேர்தல் மலேசிய ஊடக வரலாற்றிலும், பொதுத் தேர்தல் பிரச்சாரங்கள் நடைமுறைகளிலும் மாபெரும் வித்தியாசத்தை அடைந்துள்ளது.

கடந்த பொதுத் தேர்தல்களில் தேசிய முன்னணிக்கு பெரும் பக்க பலமாக இருந்தவை தொலைக்காட்சி ஊடகங்கள்.

ஆனால் இந்த முறை தொலைக்காட்சி பக்கமே மக்கள் தலைவைத்துக் கூடப் படுக்கவில்லை. மாறாக, முகநூல் (பேஸ்புக்), டுவிட்டர், யூடியூப் என இணையம் மற்றும் செல்பேசிகளின் வாயிலான சமூக ஊடகங்களில் மட்டுமே மக்கள் தினமும் ஊறிக் கிடக்கின்றனர்.

#TamilSchoolmychoice

தொலைக்காட்சி ஊடகங்கள் ஒருசார்பு செய்திகளை மட்டுமே வெளியிடுகின்றன என்பதால் அதனை யாரும் பார்க்க முன்வரவில்லை. மாறாக, இணைய ஊடகங்கள் இலட்சக்கணக்கான வாசகர்களை ஈர்த்து வருகின்றன.

கட்டண முறையில் செயல்படும் மலேசியாகினி இணைய ஊடகம், பொதுத் தேர்தலை முன்னிட்டு இரண்டு வாரங்களுக்கு பொதுமக்களுக்கு இலவசமாக தனது செய்திகளைப் படிக்க, பார்க்க வாய்ப்பளித்தது. மலேசியாகினியின் ‘கினிடிவி’ காணொளி ஊடகமும் தற்போது பிரபலம் – சில நிமிடங்கள் மட்டுமே ஓடக் கூடிய விறுவிறுப்பான – சுருக்கமான காணொளிகள் காரணமாக!

நஜிப்பின் இன்றைய இரவு உரை குறித்த அறிவிப்பு

“காரில் ஏறியதுமே நான் பார்ப்பது, யூடியூப்பில் யார் என்ன பேசியிருக்கிறார்கள் என்பதைத்தான்” என பராமரிப்பு பிரதமர் நஜிப் துன் ரசாக்கே சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

துன் மகாதீரின் பொதுத் தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்தும் அவரது டுவிட்டர், முகநூல் தளங்களின் வழி நேரலையாக ஒளிபரப்பப்பட்டன.

மகாதீரின் கூட்டங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து அவரது உரையைச் செவிமெடுத்தது ஒருபுறமிருக்க, அவரது உரைகள் நேரலையாக ஒளிபரப்பப்பட்டபோது ஆயிரக்கணக்கானோர் அதனை சமூக ஊடகங்களின் வழியாகப் பார்த்தனர்.

62 ஆயிரம் பார்வையாளர்களை ஈர்த்த மகாதீரின் புத்ரா ஜெயா உரையின் முகநூல் நேரலை

உதாரணமாக, மகாதீர் புத்ரா ஜெயாவில் உரையாற்றியபோது ஏறத்தாழ 62 ஆயிரம் பேர் அவரது உரையை நேரலையாக முகநூல் வழி பார்த்திருக்கின்றனர் (பார்க்க மேலே உள்ள படம்).

அதே போன்று, இன்று செவ்வாய்க்கிழமை இரவு 10.00 மணிக்கு இன்னும் சற்று நேரத்தில் துன் மகாதீரும், நஜிப்பும் ஒரே நேரத்தில் நாட்டு மக்களுக்கு தங்களின் தேர்தல் செய்திகளை வழங்கவிருக்கின்றனர்.

டிவி3 தொலைக்காட்சி ஊடகத்தின் வழி உரையாற்றப் போகும் நஜிப், அதனை யாரும் பார்க்க மாட்டார்கள் என்ற அச்சத்தினாலோ என்னவோ, தனது உரையை யூடியூப் மற்றும் முகநூல் தளத்திலும் நேரலையாக ஒளிபரப்பு செய்கிறார்.

மகாதீரோ, தொலைக்காட்சியை நாடவில்லை. அவருக்கு அந்த வாய்ப்பும் வழங்கப்படமாட்டாது.

முகநூல், ஜசெகவின் ‘உபா டிவி’ ஆகியவற்றின் வழியாகவும், 222 நாடாளுமன்றத் தொகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான வெண்திரைகளின் வழியும் மகாதீரின் உரை நேரலையாக ஒளிபரப்பாகவிருக்கின்றது.

சுமார் 10 மில்லியன் பார்வையாளர்களை அவரது உரை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதான் இந்தப் பொதுத் தேர்தல் மூலம் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் நவீன ஊடக மாற்றம்!

-இரா.முத்தரசன்