பூச்சோங் – மலேசியாவில் எதிர் அணிகளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் செயல்படுவது இப்போதெல்லாம் சாதாரணமாகி விட்டது.
14-வது பொதுத் தேர்தலில் பாஸ் கட்சியில் அத்தகைய சம்பவம் அண்மையில் நடந்தது. முன்னாள் கிளந்தான் மந்திரி பெசார் நிக் அசிசின் மகன்களில் ஒருவரான நிக் ஒமார் இறுதி நேரத்தில் பாஸ் கட்சியில் இருந்து விலகி அமானாவில் சேர்ந்தார். கிளந்தான் மாநிலத்தின் செம்பாக்கா சட்டமன்ற வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார்.
அவரது சகோதரர் நிக் முகமட் அப்து, கிளந்தான் மாநிலத்தின் பாச்சோக் நாடாளுமன்றத் தொகுதியில் பாஸ் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
மஇகா-ஜசெக எதிரணி சகோதரர்கள், மோகன்- கண்ணன்
அதே போன்று மஇகாவின் தேசிய உதவித் தலைவராக இருக்கும் டத்தோ டி.மோகன் மஇகாவில் தீவிரமாக செயல்பட்டு வரும் வேளையில் அவரது சகோதரர் டி.கண்ணன் சிலாங்கூர் ஜசெகவில் தீவிரமாக செயல்பட்டு வருபவராவார்.
சகோதரர்கள் இருவரும் எதிரணியில் இருந்தாலும், இன்று பூச்சோங் 14 வது மைல் தேசிய வகை பள்ளியின் வாக்களிப்பு மையத்தில் தங்களின் வாக்குகளை ஒன்றாக குடும்பத்தினரோடு வருகை தந்து பதிவு செய்தனர்.
டி.மோகன், அவரது தாயார் காமாட்சி அம்மாள், அண்ணன் இந்திரன் தங்கராசு, தம்பி கண்ணன் தங்கராசு, மனைவி லோகேஸ்வரி மோகன், ஆகிய அனைவரும் ஒன்றாக வந்து தங்கள் வாக்குகளைச் செலுத்தினர்.
இவர்களில் கண்ணன் தங்கராசு ஜனநாயக செயல்கட்சியில் நீண்ட காலமாக தீவிரமாக ஈடுபட்டு செயல்பட்டு வருகிறார்.