கோத்தா பாரு – கிளந்தான் மாநிலத்தைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தால் அம்மாநிலத்தின் மந்திரி பெசாராக நிக் ஒமார் நிக் அசிஸ் (படம்) நியமிக்கப்படுவார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கிளந்தான் மாநிலத்தின் பக்காத்தான் கூட்டணி தலைவர் ஹூசாம் மூசா இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
பொதுத் தேர்தலுக்கு ஒருநாளுக்கு முன்பாக வெளியிடப்பட்டுள்ள பக்காத்தான் கூட்டணியின் இந்த அறிவிப்பு கிளந்தான் மாநில வாக்காளர்களிடையே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிக் ஒமாரின் தந்தை மறைந்த நிக் அசிஸ் கிளந்தான் மாநில மந்திரி பெசாராக பல்லாண்டுகள் ஆட்சி செய்து கிளந்தான் மாநில மக்களிடையே பெரும் செல்வாக்கோடு திகழ்ந்தவர், அவரது காலடிச் சுவட்டில் நிக் அசிஸ் பல தவணைகள் தற்காத்த செம்பாக்கா சட்டமன்றத் தொகுதியில் அமானா கட்சி சார்பில் போட்டியிடுகிறார் நிக் ஒமார்.
நிக் ஒமார் வருகையின் காரணமாக, கிளந்தான் மாநிலத்தில் பக்காத்தான் கூட்டணி பெருமளவில் வாக்குகளை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாஸ் கட்சி எதிர்க்கட்சிக் கூட்டணியில் இல்லாத குறையை அமானா கட்சி ஓரளவுக்குத் தீர்த்து வைத்தாலும், நிக் ஒமார் இனி நிக் அசிஸ் விட்டுச் சென்ற காலியிடத்தை நிரப்பி வைப்பார் என்ற எதிர்பார்ப்பு ஓரிரண்டு நாட்களிலேயே நாடு முழுவதும் குறிப்பாக கிளந்தான் மாநிலம் முழுவதும் பரவி வருகிறது.
ஆனால் நிக் ஒமாருக்கு கிடைத்து வரும் ஆதரவு மாநிலத்தில் ஆட்சி அமைக்கப் போதுமானதாக இருக்குமா அல்லது கிளந்தான் மாநில சட்டமன்றம் தேசிய முன்னணி, பக்காத்தான், பாஸ் ஆகிய கட்சிகளுக்கிடையில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத இழுபறிப் போராட்டத்தைத் தோற்றுவிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.