கோலாலம்பூர் – நேற்று வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு துன் மகாதீரின் பிரதமர் பதவிப் பிரமாணம் நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டு, பின்னர் இரவு 9.30 மணிக்குத்தான் மகாதீர் பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்.
இதற்கிடையில், நாடு முழுமையிலும் மக்கள் பரபரப்போடும், ஆர்வத்தோடும் துன் மகாதீர் பதவியேற்பதற்காகக் காத்திருந்ததை தொலைக்காட்சியின் வழி பார்த்துக் கொண்டிருந்தனர்.
இதுகுறித்து மாமன்னர் சுல்தான் மாஹ்முட் சார்பில் அரண்மனை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அரசியல் சாசனப்படி மாமன்னர் தனது கடமையை ஆற்றி, மகாதீரை முறைப்படி பிரதமராக நியமித்தார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மக்களின் விருப்பத்தை மாமன்னர் முழுமையாக ஆதரிக்கிறார்-மரியாதை கொடுக்கிறார் என்றும் அந்த அறிக்கை தெரிவித்தது. மலேசியா மற்றும் நாட்டு மக்களின் நலனுக்காக பக்காத்தான் ஹரப்பான் தலைவர்களுடன் இணைந்து பணியாற்ற மாமன்னர் ஆர்வமுடன் இருக்கிறார் என்றும் அந்த அறிக்கை மேலும் கூறியது.
14-வது பொதுத் தேர்தலுக்கான அதிகாரபூர்வ முடிவுகள் பிற்பகலில்தான் அரண்மனைக்குக் கிடைக்கப் பெற்றதாகவும், அதைத் தொடர்ந்து பிகேஆர் கட்சியின் தலைவர் வான் அசிசா, பெர்சாத்து கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின், ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், அமானா கட்சியின் தலைவர் முகமட் சாபு ஆகியோரைச் சந்தித்து மகாதீருக்கான அவர்களின் ஆதரவை மாலை 5.00 மணி அளவில் உறுதிப்படுத்திக் கொண்டதாகவும், அதன் பின்னரே இரவு 9.30 மணிக்கு பதவிப் பிரமாணத்தை நிர்ணயித்ததாகவும் அரண்மனை அறிக்கை தெரிவித்தது.
பின்னர்தான் மகாதீரை அழைத்துச் சந்தித்து அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் அழைப்பை அவருக்கு மாமன்னர் விடுத்தார் என்றும் அந்த அறிக்கை மேலும் தெரிவித்திருக்கிறது.