பெங்களூரு – கடந்த மே 12-ஆம் தேதி மிகவும் பரபரப்புடன் வாக்களிப்பு நடைபெற்று முடிந்த கர்நாடக மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல் முடிவுகள் இன்று செவ்வாய்க்கிழமை வெளியாகின்றன.
கடந்த தவணைக் காலத்தில் காங்கிரஸ் ஆட்சி புரிந்த கர்நாடகா மாநிலத்தை இந்த முறை மீண்டும் பாஜக கைப்பற்றுமா என்ற பரபரப்பும், ஆர்வமும் இந்தியா முழுவதும் ஏற்பட்டுள்ளது.
காரணம், இந்தியாவின் தென் மாநிலங்களில் காலூன்ற முடியாமல் தவிக்கும் பாஜக, ஒரே ஒரு தவணை கர்நாடகாவில் மட்டும் ஆட்சியைப் பிடித்தது. அப்போது முதல்வராக இருந்த எடியூரப்பா சில சர்ச்சைகளினால் தனது பதவியை இழந்தார்.
அதன் பின்னர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது.
தற்போது மீண்டும் இந்த மாநிலத் தேர்தல்களில் எடியூரப்பா கர்நாடகா மாநிலத்தின் பாஜக முதலமைச்சராக முன்னிறுத்தப்பட்டு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.
பரவலான கருத்துக் கணிப்புகள் பாஜகவே வெற்றி பெறும் எனத் தெரிவிக்கின்றன.
அவ்வாறு கர்நாடகா மாநிலத்தை பாஜக மீண்டும் கைப்பற்றினால் அதன் மூலம் அதன் ஆதிக்கம் தென் மாநிலங்களிலும் பரவத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.