கோலாலம்பூர் – மலேசிய அரசியலில் சர்ச்சைக்குரிய முக்கிய இடத்தை வகித்து வருகிறது ‘சரவாக் ரிப்போர்ட்’ (Sarawak Report) என்ற இணையத் தளம். இன்று மலேசியாவில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்திற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே பிள்ளையார் சுழி போட்டது சரவாக் ரிப்போர்ட் இணையத் தளம்தான் என்று கூறிவது மிகையாகாது.
சரவாக் ரிப்போர்ட் இணையத் தளம் மற்றும் வானொலி நிலையமான ரேடியோ பிரீ சரவாக் (Radio Free Sarawak) ஆகிய தளங்களைத் தோற்றுவித்தவர் கிளேர் ரியூகாசல் பிரவுன். பிரிட்டனைச் சேர்ந்த புலனாய்வப் பத்திரிக்கையாளர் பிரவுன்.
ஆனால், சரவாக் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த காரணத்தால் அம்மாநிலத்தின் மீது தனிப்பாசம் கொண்ட பிரவுன், சரவாக் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் தாயிப் மாஹ்முட் அரசாங்கத்தின் ஊழல்களை வெளிக் கொணர்வதற்காகவே சரவாக் ரிப்போர்ட் என்ற இணையத் தளத்தைத் தொடங்கினார்.
பின்னர் 1எம்டிபி விவகாரம் வெளிச்சத்துக்கு வர அது குறித்தும் விரிவான கட்டுரைகளை சரவாக் ரிப்போர்ட் தளத்தில் பிரசுரிக்கத் தொடங்கினார்.
இன்றைக்கு துணிந்து பகிரங்கமாகப் பேசப்படும் – எழுதப்படும் – பல 1எம்டிபி விவகாரங்கள் அன்று கிளேர் பிரவுனால், வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்பட்டவை என்பதை யாரும் மறந்து விட முடியாது.
அப்போதைய நஜிப் அரசாங்கமோ சரவாக் ரிப்போர்ட் தளத்தை முடக்கியதோடு, அதனை சட்டத்துக்கு எதிரானது என அறிவித்தது. இதன் மூலம் மலேசியர்கள் யாரும் சரவாக் ரிப்போர்ட் இணையத் தளத்துடன் தொடர்பு கொண்டிருந்தால் அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படலாம் என்ற நிலைமை ஏற்பட்டது.
அதுமட்டுமல்லாமல், சரவாக் ரிப்போர்ட்டின் நிறுவனர் கிளேர் பிரவுன் மலேசிய அரசாங்கத்தினால் தேடப்படும் குற்றவாளி போல் சித்தரிக்கப்பட்டார். அவர் மலேசியாவுக்குள் வர தடையும் விதிக்கப்பட்டது.
அதைவிட முக்கியமாக பிரவுன் மீது மலேசியக் காவல் துறை கைது ஆணையே பிறப்பித்தது.
இருந்தாலும் இலண்டனில் இருந்து கொண்டே தனது போராட்டத்தைத் தொடர்ந்தார் பிரவுன்.
மே 9 பொதுத் தேர்தல் புதிய மலேசியாவுக்கு வித்திட, கடந்த வெள்ளிக்கிழமை மே 18-ஆம் தேதி எந்தவிதப் பிரச்சனையும் இன்றி கோலாலம்பூர் திரும்பினார் பிரவுன். மலேசியாவில் நிகழ்ந்து வரும் ஆட்சி மாற்றத்தையும், அரசாங்கத்தில் ஏற்பட்டு வரும் உருமாற்றங்களையும் நேரடியாகக் கண்டு அனுபவிக்க மலேசியா வந்திருப்பதாக கிளேர் பிரவுன் கூறியிருக்கிறார்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடனேயே தடை செய்யப்பட்டிருந்த அவரது சரவாக் ரிப்போர்ட் இணையத் தளம் மீண்டும் மலேசியாவில் சுலபமாக அனைவராலும் பார்க்க முடிகிறது.
மலேசியாவில் நுழைவதற்கு பிரவுனுக்கு விதிக்கப்பட்ட தடையும் உடனடியாக நீக்கப்பட்டிருக்கிறது. அன்று யார் யார் பிரவுனை நாட்டிற்குள் நுழைவதற்கு தடை விதித்தார்களோ அவர்களே இன்று நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் அதிரடி தலைகீழ் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
மிகப் பெரிய சாதனையைச் செய்திருக்கிறீர்கள் என ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்ட மலேசியர்களையும் பாராட்டியிருக்கிறார் பிரவுன்.
இனி மலேசிய அரசியலிலும், கடந்த கால ஊழல் விவகாரங்களை வெளிக் கொணர்வதிலும், சரவாக் ரிப்போர்ட்டும், பிரவுனும் தொடர்ந்து முக்கியப் பங்காற்றுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
-இரா.முத்தரசன்