Home நாடு “ஜோ லோவை 2 முறை சந்தித்தேன்” – ஜஸ்டோ

“ஜோ லோவை 2 முறை சந்தித்தேன்” – ஜஸ்டோ

904
0
SHARE
Ad
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் ஜஸ்டோ

கோலாலம்பூர் – பெட்ரோ சவுதி நிறுவனத்தின் முன்னாள் அனைத்துலக அதிகாரியான சேவியர் அண்ட்ரே ஜஸ்டோ கோலாலம்பூர் திரும்பி அதிரடியானப் பல தகவல்களை ஊடகங்களில் வெளியிட்டு வருகிறார்.

அதில் ஒன்று 1எம்டிபி விவகாரத்தில் நடுநாயகமாகத் திகழும் ஜோ லோவை இரண்டு முறை சந்தித்ததாக அவர் கூறியிருப்பது.

எனினும் ஜோ லோவை எங்கு சந்தித்தேன் என்பது போன்ற விவரங்களை வெளியிட அவர் மறுத்து விட்டார்.

#TamilSchoolmychoice

தன்னைச் சுற்றி மலேசிய அரசாங்கமும் பெட்ரோ சவுதி நிறுவனமும் மர்மமான முறையில் குற்றச்சாட்டுகளைப் பின்னி என்னைக் கெட்டவன் போலவும், அவர்கள் நல்லவர்கள் போலவும் காட்டிக் கொள்வதில் வெற்றியடைந்தனர் என்றும் ஜஸ்டோ கூறியிருக்கிறார்.

1எம்டிபியின் கணக்கிலிருந்து ஒரு பெரும் தொகை பெட்ரோ சவுதி நிறுவனத்திற்கு கைமாற்றப்பட்டது. பின்னர் அந்தப் பணம் ஜோ லோ போன்றவர்களின் நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டது.

மகாதீர்-ஜஸ்டோ 2 முறை சந்திப்பு

இது குறித்த மின் அஞ்சல்களை முதன் முதலில் வெளியுலகத்திற்குக் கொண்டுவந்து காட்டியவர்தான் ஜஸ்டோ.

அதைத் தொடர்ந்து அவர் அந்தத் தகவல்களை திருடினார் – திருட்டுத் தனமாக பதிவிறக்கம் செய்தார் – தனது உயர் அதிகாரிகளை மிரட்டினார் – என்றெல்லாம் குற்றம் சாட்டப்பட்டு தாய்லாந்து நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டார்.

“பின்னர் ஒரு பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற நபர் ஒருவர் (அவரும் 1எம்டிபி விவகாரத்தில் விசாரிக்கப்படுபவர்) எழுதித் தந்த சில பக்கங்கள் கொண்ட ஒப்புதல் வாக்குமூலத்தில் அவர்கள் எழுதிக் கொடுத்தபடி அப்படியே கையெழுத்திட்டேன். அதில்தான் நான் திருட்டுத் தனமாக மின் அஞ்சல்களை பதிவிறக்கம் செய்தேன் என எழுதப்பட்டிருந்தது. உண்மையில் நான் திருடவில்லை. எனக்கு அவை நேரடியாகக் கிடைத்தன” என்றும் ஜஸ்டோ கூறியிருக்கிறார்.

“தாய்லாந்து சிறையில் நான் அனுபவித்த கொடுமைகள், எனக்கும் என் குடும்பத்திற்கும் விடுக்கப்பட்ட மிரட்டல்கள் ஆகியவற்றை வைத்துப் பார்த்தால் – 1963-இல் அமெரிக்க அதிபர் ஜான் எப்.கென்னடியை சுட்டுக் கொன்றது நான்தான் என அவர்கள் எழுதித் தந்திருந்தாலும் நான் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருப்பேன்” என விரக்தியுடன் கூறியிருக்கிறார் ஜஸ்டோ.