கோலாலம்பூர் – பிரதமர் துன் மகாதீரைச் சந்திக்க ஆர்வம் கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் வியாழக்கிழமை மே 31-ஆம் தேதி தனது பயணத் திட்டத்தில் சில இறுதி நேர மாற்றம் ஏற்படுத்திக் கொண்டு, கோலாலம்பூர் வந்து மகாதீரைச் சந்திக்கவுள்ளார்.
அந்த சமயத்தில் துணைப் பிரதமர் வான் அசிசாவையும், அவரது கணவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமையும் மோடி சந்திப்பார்.
இரண்டு ஆசியான் நாடுகளுக்கு மோடி வருகை தரவுள்ளார். மே 29 முதல் 31 வரை இந்தோனிசியாவுக்கும், மே 31 முதல் ஜூன் 2 வரை சிங்கப்பூருக்கும் மோடி வருகை தருகிறார்.
ஆனால், இந்தப் பயணத் திட்டத்தில் மோடி கோலாலம்பூர் வருகை தருவதற்கான திட்டம் ஏதும் முதலில் இல்லை. இருப்பினும் மே 9 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் மலேசியாவுக்குப் புதிய பிரதமராக மகாதீர் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து தனது பயணத் திட்டத்தில் சிறிய மாற்றங்களைச் செய்து கொண்டு மகாதீரைச் சந்திப்பதற்காகவே பிரத்தியேகமாக கோலாலம்பூர் பறந்து வருகிறார் மோடி.
துன் மகாதீரை மோடி சந்திப்பது இதுவே முதன் முறையாகும்.
நஜிப் பிரதமராக இருந்த காலகட்டத்தில் 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மோடி மலேசியாவுக்கு அதிகாரபூர்வ வருகை ஒன்றை மேற்கொண்டிருந்தார்.