Home நாடு குவான் எங் குற்றச்சாட்டுகளை பதிலளிக்காமல் நழுவும் நஜிப்!

குவான் எங் குற்றச்சாட்டுகளை பதிலளிக்காமல் நழுவும் நஜிப்!

1585
0
SHARE
Ad
நஜிப் – குவான் எங் நிகழ்ச்சி ஒன்றில் – கோப்புப் படம்

கோலாலம்பூர் – 1எம்டிபி விவகாரங்கள் மற்றும் நிதி நிலைமைகள் குறித்து நிதி அமைச்சர் லிம் குவான் எங் எழுப்பியுள்ள கேள்விகளுக்குப் பதிலளிக்க இது தருணமல்ல என முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறியிருக்கிறார்.

நிதி அமைச்சின் பகிரங்க அறிவிப்புகளுக்கும், நாட்டின் கடன் சுமை குறித்து லிம் குவான் எங் விடுத்த அறிக்கைகளுக்கும் எதிர்ப்புக் குரல் கொடுத்திருந்தார் நஜிப்.

அதைத் தொடர்ந்து முன்னாள் நிதி அமைச்சருமான நஜிப்பின் போக்கைக் கடுமையாகச் சாடிய லிம் குவான் எங், 1 எம்டிபி விவகாரத்துக்கு நஜிப்பே முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும், 1எம்டிபி தொடர்பில் 2009 முதல் 2013 வரை முதலீடுகள் செய்யப்பட்ட 8.33 பில்லியன் ரிங்கிட் எங்கே போனது எனவும் நஜிப்பிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

#TamilSchoolmychoice

மேலும் சில கேள்விகளையும் நஜிப்புக்கு குவான் எங் முன் வைத்திருந்தார்.

நேற்று திங்கட்கிழமை (மே 28) இது குறித்து விடுத்த அறிக்கையில் நஜிப் “இந்த சமயத்தில் குவான் எங் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதோ, 1எம்டிபி விவகாரம் குறித்து விளக்கமளிப்பதோ பொருத்தமாக இருக்காது” என தனக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

1எம்டிபி குறித்த விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கூறியிருக்கும் நஜிப் இந்த விவகாரத்தில் குவான் எங்குடன் பொது விவாதத்தில் ஈடுபடுவதில் பலன் ஏதும் இல்லை என்றும் அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.