Home நாடு அந்நியத் தொழிலாளர்கள்: சிங்கை பாணியை ஆய்வு செய்வோம்

அந்நியத் தொழிலாளர்கள்: சிங்கை பாணியை ஆய்வு செய்வோம்

1553
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – அந்நியத் தொழிலாளர்களை நிர்வகிப்பதில் அண்டை நாடான சிங்கப்பூரின் நடைமுறைகளையும், சட்டங்களையும் ஆய்வு செய்து அதன்படி செயல்படுத்த தனது அமைச்சு முயற்சி செய்யும் என மனித வள அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்துள்ளார்.

“அந்தியத் தொழிலாளர்கள், தங்களின் முதலாளிகளிடமிருந்து பாதியிலேயே வெளியேறும் விழுக்காடு சிங்கப்பூரில் மிகவும் குறைவு. எனவே அவர்களின் நடைமுறைகளை ஆய்வு செய்து பின்பற்றினாலே போதும். மாறாக சுவிட்சர்லாந்து போன்ற தூர நாடுகளுக்குச் செல்ல வேண்டியதில்லை” எனவும் குலா கூறியிருக்கிறார்.

அந்நியத் தொழிலாளர்களை தடை செய்வது நமது நோக்கமல்ல எனக் கூறியிருக்கும் குலா, அவர்கள் முறையான நடைமுறைகளின் கீழ் நாட்டுக்குள் வருவதும், தோட்டத் தொழில், தயாரிப்புத் துறை தொழில்கள் போன்ற தேவையான, பொருத்தமான துறைகளில் பணிகளில் அமர்த்தப்படுவதும்தான் முக்கியம் என்றும் கண்காணிக்கப்பட வேண்டிய ஒன்று என்றும் வலியுறுத்தினார்.

#TamilSchoolmychoice

வேலை வாய்ப்புகளில் மலேசியர்களுக்கு முதல் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதையும் நாம் உறுதி செய்யவேண்டும் எனக் கூறிய குலசேகரன், அதே வேளையில் வணிகங்களில் ஈடுபடும் அந்நியத் தொழிலாளர்களை குறிப்பாக அங்காடிக் கடை வியாபாரங்களில் ஈடுபடும் அந்நியத் தொழிலாளர்களை அகற்றும் பணிகளையும் தமது அமைச்சு மேற்கொள்ளும் எனவும் குலா மேலும் தெரிவித்தார்.

வியாபாரங்களில் ஈடுபட்டிருக்கும் அந்நியத் தொழிலாளர்கள் குறித்து தனது அமைச்சுக்குப் புகார் செய்யலாம் என்றும் கூறியிருக்கும் குலா, அவர்கள் வணிகம் செய்வதாக இருந்தால் அவர்கள் சொந்த நாட்டில் செய்து கொள்ளட்டும், இங்கே வருவது வேலை செய்வதற்கு மட்டும் தான் என்பதையும் வலியுறுத்தினார்.