Home நாடு கைரி அம்னோ துணைத் தலைவருக்குப் போட்டியா?

கைரி அம்னோ துணைத் தலைவருக்குப் போட்டியா?

896
0
SHARE
Ad

கோலாலம்பூர் – எதிர்வரும் அம்னோ கட்சித் தேர்தலில் எந்தப் பதவிக்கும் போட்டியிடப் போவதில்லை என ஹிஷாமுடின் ஹூசேன் ஓன் அறிவித்திருப்பதைத் தொடர்ந்து அந்தப் பதவிக்கான போட்டியில் அம்னோ இளைஞர் பகுதித் தலைவர் கைரி ஜமாலுடின் குதிப்பாரா என்ற ஆர்வம் அம்னோவினரிடையே ஏற்படலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

தற்போது அம்னோவின் துணைத் தலைவருக்கான பொறுப்புகளை வகித்து வரும் ஹிஷாமுடின் அம்னோ துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவார் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. எனினும் நேற்று சனிக்கிழமை அவர் அம்னோ துணைத் தலைவர் பதவிக்கோ வேறு எந்தப் பதவிக்கோ போட்டியிடப் போவதில்லை என அறிவித்துவிட்டார்.

இதற்கிடையில், கைரி ஜமாலுடின் அம்னோ தேசிய உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிட விரும்புவதாகத் தெரிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

ஆனால், தற்போது ஹிஷாமுடின் முடிவைத் தொடர்ந்து தனது முடிவையும் கைரி மாற்றிக் கொண்டு, உதவித் தலைவருக்குப் போட்டியிடாமல் துணைத் தலைவருக்குப் போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

ஏற்கனவே, நெகிரி செம்பிலான் முன்னாள் மந்திரி பெசார் முகமட் ஹசான் துணைத் தலைவருக்குப் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார். அவர் கைரியின் தீவிர ஆதரவாளராகக் கருதப்படுகிறார். எனவே, அவர் போட்டியிலிருந்து விலகிக் கொண்டு கைரி துணைத் தலைவருக்குப் போட்டியிட்டால் அந்த முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அம்னோ தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக சாஹிட் ஹாமிடி ஏற்கனவே அறிவித்திருக்கிறார்.