Home நாடு சரவாக் தேசிய முன்னணி கலைந்தது!

சரவாக் தேசிய முன்னணி கலைந்தது!

986
0
SHARE
Ad
அபாங் ஜொஹாரி ஓப்பெங் – சரவாக் மாநில முதல்வர்

கூச்சிங் – சரவாக் தேசிய முன்னணி கூட்டணிக்குத் தலைமையேற்றுள்ள பார்ட்டி பெசாகா பூமிபுத்ரா பெர்சாத்து (பிபிபி) உள்ளிட்ட நான்கு முக்கிய கட்சிகள் தேசிய முன்னணி கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ளன. இதைத் தொடர்ந்து காலமெல்லாம் தேசிய முன்னணியின் வாக்கு வங்கி எனக் கருதப்பட்ட சரவாக் தேசிய முன்னணி சிதைந்து கலைந்திருக்கிறது.

பார்ட்டி பெசாகா பூமிபுத்ரா பெர்சாத்து, சரவாக் யுனைடெட் பியூபல்ஸ் பார்ட்டி, பார்ட்டி ராயாட் சரவாக் மற்றும் பார்ட்டி டெமோக்ரோடிக் புரொக்ரெசிவ் ஆகிய அந்த நான்கு கட்சிகளும் தேசிய முன்னணியில் இருந்து விலகி காபுங்கான் பார்ட்டி சரவாக் என்ற புதிய கூட்டணியைத் தோற்றுவித்திருப்பதாக சரவாக் முதலமைச்சர் அபாங் ஜொஹாரி ஓபெங் இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 12) அறிவித்தார்.

சரவாக் மாநிலத்தின் பெரும்பான்மை நாடாளுமன்றத் தொகுதிகளை தேசிய முன்னணி கைப்பற்றியிருந்தாலும், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து தேசிய முன்னணியில் இருந்து வெளியேறும் முடிவை சரவாக் தேசிய முன்னணி கட்சிகள் எடுத்துள்ளன.

#TamilSchoolmychoice

பலத்த சிந்தனைகள், விரிவான விவாதங்கள் ஆகியவற்றுக்குப் பின்னரும் நாட்டில் மே 9 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் குறித்து ஆழ்ந்து கவனித்த பின்னரும் இந்த முடிவைத் தாங்கள் எடுத்துள்ளதாகவும் அபாங் ஜொஹாரி தெரிவித்துள்ளார்.

நாட்டின் புதிய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு காபுங்கான் பார்ட்டி சரவாக் என்ற புதிய தளத்தின் கீழ் இணைந்து பணியாற்றவும், சரவாக் மாநிலத்தின் உரிமைகளுக்காகவும், அரசியல் சாசனத்தில்  கண்டுள்ள விதிமுறைகளுக்கேற்பவும் போராடத் தாங்கள் முடிவு செய்திருப்பதாகவும் அபாங் ஜொஹாரி ஓபெங் மேலும் தெரிவித்துள்ளார்.