Home நாடு அல்தான்துயா கொலை வழக்கு மீண்டும் நடத்தப்படலாம்

அல்தான்துயா கொலை வழக்கு மீண்டும் நடத்தப்படலாம்

945
0
SHARE
Ad
செடிவ் ஷாரிபு-ராம் கர்ப்பால் சிங் – கர்ப்பால் சிங் மகளும், ராம் கர்ப்பாலின் தங்கையுமான சங்கீத் கவுர்

கோலாலம்பூர் – 2006-இல் கொலை செய்யப்பட்ட மங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபுவின் தந்தை செடிவ் ஷாரிபுவுடன் இன்று அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமசைச் சந்தித்த அவருடைய வழக்கறிஞர் ராம் கர்ப்பால் சிங், அல்தான்துயா கொலை வழக்கு மீண்டும் தொடங்கப்படலாம் எனத் தெரிவித்தார்.

இந்த வழக்கு தொடர்பாக புதிய ஆதாரங்கள், புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருப்பதால் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க போதிய காரணங்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட ராம் கர்ப்பால், தங்களின் கோரிக்கையை டோமி தோமஸ் அக்கறையோடு கேட்டறிந்தார் என்றும் தெரிவித்தார்.

எனினும் மேலும் கூடுதல் விவரங்களைத் தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.

#TamilSchoolmychoice

மலேசிய நீதிமன்ற வழக்குகளின் வரலாற்றில் ஆண்டுகள் பல கடந்தாலும், மக்களின் மனங்களில் அழியாத பல சர்ச்சைகளையும், சந்தேகங்களையும் எழுப்பி இன்று வரை பேசப்படும் வழக்கு மங்கோலிய அழகி அல்தான்துயாவின் கொலை வழக்கு.

அந்தக் கொலைவழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு, மீண்டும் மலேசியா வந்திருக்கும் அல்தான்துயாவின் தந்தை செடிவ் ஷாரிபு இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 19) அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமசைத் தனது வழக்கறிஞர் ராம் கர்ப்பாலுடன் சந்தித்தார்.

காணாமல் போன தனது மகளைத் தேடியும், பின்னர் தனது மகள் கொலையுண்டாள் என்ற கொடூர செய்தி கேட்டு கண்ணீருடனும் பல முறையும் மலேசியா வந்து அலைந்த ஷாரிபு, வழக்கு விசாரணையின் போதும் பல முறை மலேசியா வந்து தனது மகளின் கொலை வழக்கு விசாரணைகளில் சில சந்தேகங்களை எழுப்பியிருந்தார்.

ஆனாலும், கடந்த ஆட்சியில் ஷாரிபுவின் கோரிக்கைகள் அனைத்தும் அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டன.

இன்று டோமி தோமசைச் சந்தித்த ஷாரிபு நாளை புதன்கிழமை (ஜூன் 20) பிரதமர் துன் மகாதீரையும் சந்திக்கவுள்ளார்.