பத்துமலை – எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 24-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த பேரணிக்கு எதிராக நீதிமன்றத் தடையுத்தரவு பெறப்பட்டிருக்கிறது.
நேற்று வியாழக்கிழமை (ஜூன் 21) நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத் தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா நீதிமன்றத் தடையுத்தரவு குறித்த விவரங்களை வெளியிட்டார்.
அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஆலய நிர்வாகத்தினரும் கலந்து கொண்டனர்.
இந்து ஆகம அணித் தலைவர் என்ற இயக்கத்தின் தலைவர் எனக் கூறிக்கொண்டு இந்தப் பேரணியை ஆறுமுகம் என்ற அருண் துரைசாமி நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறார் என்றும் தெரிவித்த நடராஜா, அருண் துரைசாமி அரசாங்கப் பதிவேட்டின்படி திவாலானவர் என்பது அறியப்பட்டிருக்கிறது என்ற தகவலையும் வெளியிட்டார்.
இந்து ஆகம அணி இன்னும் பதிவு பெறாத ஓர் இயக்கம் என்பதையும் நடராஜா சுட்டிக் காட்டியிருக்கிறார்.
“சட்டப்படி இயங்குகிறோம்”
மலேசிய சட்டங்களின்படி தாங்கள் முறைப்படி இயங்குவதாகவும், ஆலய நிர்வாகம் முறைப்படி தன்னைத் தலைவராகவும், மற்றவர்களைப் பொறுப்பாளர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிலையில், ஒரு குழுவினர் எங்களை பதவி விலகச் சொல்வது முறையல்ல என்றும் நடராஜா மேலும் கூறினார்.
நேற்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேவஸ்தானச் செயலாளர் கு.சேதுபதி “எங்கள் மீது புகார்கள் இருந்தால் தாராளமாக காவல் துறையில் புகார் செய்யலாம். நீதிமன்ற நடவடிக்கை எடுக்கலாம். அதை விடுத்து ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் ஆலயத்திற்கு வழிபட வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணம் பிரச்சனைகளை உருவாக்க வேண்டாம்” என்று தெரிவித்தார்.
இந்தப் பேரணி குறித்து தாம் காவல் துறையில் புகார் ஒன்றைச் செய்திருப்பதாகவும் சேதுபதி குறிப்பிட்டார்.
“பக்தர்கள் வழிபடத் தடையில்லை”
நீதிமன்ற உத்தரவு குறித்து மேலும் விளக்கமளித்த நடராஜா “ஜூன் 24-ஆம் தேதி யார் வேண்டுமானாலும் பத்துமலை ஆலய வளாகத்திற்குள் வரலாம், இறைவனை வழிபடலாம். அதற்குத் தடையில்லை. ஆனால், கோஷம் எழுப்புவதற்கும், ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் பதாகைகள் ஏந்துவதற்கும், ஊர்வலம் செல்வதற்கும்தான் நீதிமன்றத் தடையுத்தரவு பெறப்பட்டிருக்கிறது” என்றும் தெரிவித்தார்.
எனவே, பொதுமக்கள் யாரும் இந்தப் பேரணியில் நீதிமன்றத் தடையுத்தரவை மீறிக் கலந்து கொள்ள வேண்டாம் என்றும் டான்ஸ்ரீ நடராஜா கேட்டுக் கொண்டார்.