Home உலகம் 6-1 : இங்கிலாந்து கோல் மழை பொழிந்தது!

6-1 : இங்கிலாந்து கோல் மழை பொழிந்தது!

763
0
SHARE
Ad

மாஸ்கோ – உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளுக்கான தொடரில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து 6-1 கோல் கணக்கில் பனாமாவை வெற்றி கொண்டது.

முதல் பாதி ஆட்டம் முடிந்தபோதே இங்கிலாந்து 5-0 கோல் எண்ணிக்கையில் முன்னணி வகித்தது.

ஆட்டம் தொடங்கிய 8-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் ஜோன் ஸ்டோன்ஸ் கோர்னர் கிக் பந்தை கோலாக்கினார்.

#TamilSchoolmychoice

ஆட்டம் தொடங்கிய 19-வது நிமிடத்தில் பினால்டி வளையத்துக்குள் இங்கிலாந்து விளையாட்டாளரைத் தடுத்த பனாமா விளையாட்டாளரின் கைகள் பந்தின் மீது பட்டதைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு ஒரு பினால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.

அந்தப் பினால்டி வாய்ப்பைப் பயன்படுத்திய இங்கிலாந்து குழுவின் தலைவர் (கேப்டன்) ஹேரி கேன் கோலடிக்க 2-0 கோல் எண்ணிக்கையில் இங்கிலாந்து முன்னணி வகிக்கத் தொடங்கியது.

36-வது நிமிடத்தில் லிங்கார்ட் மூன்றாவது கோலை அடிக்க இங்கிலாந்து 3-0 என்ற நிலையில் தொடர்ந்து முன்னணி வகித்தது.

தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களிலேயே 40-வது நிமிடத்தில் ஜோன் ஸ்டோன்ஸ் இன்னொரு கோலை அடித்தார். இன்றைய ஆட்டத்தில் ஸ்டோன்ஸ் அடிக்கும் இரண்டாவது கோல் இதுவாகும்.

இதனைத் தொடர்ந்து 4-0 என்ற கோல் எண்ணிக்கையில் முன்னணி வகித்து வந்த இங்கிலாந்து மற்றொரு பினால்டி வாய்ப்பு கிடைத்தது.

இங்கிலாந்து விளையாட்டாளர் ஒரு கோர்னர் கிக் பந்தை அடிக்கத் தயாராகிக் கொண்டிருந்தபோது, கோல் கம்பத்தின் அருகில் பனாமா விளையாட்டாளர், இங்கிலாந்து விளையாட்டாளரைத் தடுத்ததோடு, கீழே தள்ளியதற்காக இங்கிலாந்துக்கு பினால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.

இங்கிலாந்து கேப்டன் ஹேரி கேன் அந்தப் பினால்டியை கோலாக்க முதல் பாதி ஆட்டம் முடிய 5-0 என்ற கோல் எண்ணிக்கையில் இங்கிலாந்து முன்னணி வகித்தது.

ஆட்டத்தின் 62-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் கேப்டன் ஹேரி கேன் இன்றைய ஆட்டத்தின் தனது 3-வது கோலை அடித்தார்.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் 41-வது நிமிடத்தில் பனாமாவின் பெலிப் பாலோய் ஒரு கோல் அடித்து பனாமாவுக்கு ஆறுதலைத் தந்தார்.

முழுஆட்டமும் முடிந்தபோது 6-1 கோல் எண்ணிக்கையில் இங்கிலாந்து வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.