மக்காவ் – 1எம்டிபி விவகாரம் தொடர்பில் மலேசிய அரசாங்கத்தால் தேடப்படும் கோடீஸ்வர வணிகர் ஜோ தெக் லோ, மக்காவ் தீவிலிருந்தும் தப்பித்து விட்டதாக அந்நாட்டின் பாதுகாப்பு செயலகம் அறிவித்திருக்கிறது.
நேற்று செவ்வாய்க்கிழமை பத்திரிக்கையாளர்களிடம் பேசிய காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ புசி ஹருண், ஆகக் கடைசியாகத் தங்களுக்குக் கிடைத்த தகவல்களின்படி ஜோ லோ மக்காவ் தீவில் தலைமறைவாக இருக்கிறார் எனத் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மலேசியக் காவல் துறையினர் ஜோ லோவைப் பிடிக்க மக்காவ் தீவு அரசாங்கத்திடம் விண்ணப்பித்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால், ஜோ லோவின் பெயரைக் குறிப்பிடாமல் இந்தத் தகவலை மக்காவ் அரசாங்கம் வெளியிட்டிருக்கிறது. சீனாவின் சிறப்பு நிர்வாகப் பிரதேசமான மக்காவ்வின் அரசாங்கம் நாட்டிற்குள் உள்ளே வருபவர்கள், வெளியேறுபவர்கள் ஆகியோரின் பெயர்களை வெளியிடுவதில்லை என்பதை நடைமுறையாக வைத்திருப்பதால் ஜோ லோவின் பெயரை நேரடியாக அவர்கள் குறிப்பிடவில்லை,
இந்நிலையில், காவல் துறையினரால் தேடப்படும் மலேசியக் கோடீஸ்வரர் என மறைமுகமாகக் குறிப்பிட்டு, அந்நபர் மக்காவ் பிரதேசத்திலிருந்து வெளியேறிவிட்டார் என அந்நாட்டு அரசு குறிப்பிட்டிருக்கிறது.