Home நாடு ஜோ லோ – தலைமறைவு ஓட்டம் எத்தனை நாட்கள் நீடிக்கும்?

ஜோ லோ – தலைமறைவு ஓட்டம் எத்தனை நாட்கள் நீடிக்கும்?

886
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி அரசாங்கம் பதவியேற்றது முதல் 1எம்டிபி விவகாரத்தில் சிக்கியுள்ள மையப் புள்ளியான ஜோ லோ ஒவ்வொரு நாடாக ஓடி ஒளிந்து கொள்ளும் தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

நஜிப் துன் ரசாக் ஆட்சியில் எந்தப் பிரச்சனையும் இன்றி ஏதோ ஒரு நாட்டில் பதுங்கியிருந்த ஜோ லோ – எங்கிருக்கிறார் எனக் கேள்வி எழும்போதெல்லாம் – எங்களுக்குத் தெரியவில்லை என காவல் துறை தொடர்ந்து தெரிவித்து வந்தது.

ஆனால், ஆட்சி மாறியதும், காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ புசி ஹருணும், ஏன் மகாதீரும் கூட ஜோ லோ எங்கிருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும் என்ற ரீதியில் கூறியிருந்தனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் நேற்று பத்திரிக்கையாளர்களிடம் பேசிய காவல் துறைத் தலைவர் புசி ஹருண் ஹாங்காங்கில் இருந்து தப்பி ஓடியிருக்கும் ஜோ லோ தற்போது மக்காவ்வில் ஒளிந்திருப்பதாகத் தாங்கள் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

ஹாங்காங்கில் அவர் இருப்பதை அறிந்த மலேசியக் காவல் துறைக் குழு ஒன்று ஹாங்காங் சென்றதாகவும் ஆனால் அவர் அதனை எப்படியோ மோப்பம் பிடித்து ஹாங்காங்கிலிருந்து தப்பித்து அருகிலுள்ள மக்காவ் சென்று விட்டார் என்றும் புசி ஹருண் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் ஜோ லோவின் அனைத்துலகக் கடப்பிதழ் (பாஸ்போர்ட்) கடந்த ஜூன் 15-ஆம் தேதியே இரத்து செய்யப்பட்டு விட்டதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மக்காவ் சீனாவின் சிறப்பு நிர்வாகப் பகுதியாகும். தேடப்படும் குற்றவாளிகளை நாடு கடத்தும் ஒப்பந்தம் எதனையும் மக்காவ் மற்ற நாடுகளுடன் கொண்டிருக்கவில்லை.

அனைத்துலகக் கடப்பிதழ் இரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில், அனைத்துலகக் காவல் துறையின் (இண்டர்போல்) கண்காணிப்புக்கும் ஆளாகியிருக்கும் ஜோ லோவின் தலைமறைவு ஆட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு நீடிக்கப் போகிறது என்பதைக் காண மலேசியர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.