கோலாலம்பூர் – சர்ச்சைக்குரிய மதபோதகர் சாகிர் நாயக்கை மலேசியாவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தும் விண்ணப்பம் இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே முறையாக சமர்ப்பிக்கப்பட்டது என இந்திய அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஸ்ரீ ரவிஷ் குமார் என்பவர் இந்தத் தகவலை மின்னஞ்சல் மூலமாக இன்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியதாக மலேசியாகினி இணைய ஊடகம் தெரிவித்திருக்கிறது.
“குற்றவியல் (கிரிமினல்) காரணங்களுக்காக இந்தியாவில் தேடப்படுபவரும் இந்தியக் குடியுரிமை பெற்றவருமான – மலேசியாவில் வசிக்கும் சாகிர் நாயக்கை நாடு கடத்தும் விண்ணப்பம் கடந்த ஜனவரியிலேயே சமர்ப்பிக்கப்பட்டது” என்று, 2010-ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட நாடு கடத்தும் ஒப்பந்தத்தை மேற்கோள் காட்டி அந்தப் பேச்சாளர் தெரிவித்திருக்கிறார்.
அந்த நாடு கடத்தும் விண்ணப்பம் மலேசிய அரசாங்கத்தால் இன்னும் பரிசீலனையில் இருப்பதாகவும், அந்த விண்ணப்பம் தொடர்பில் தாங்கள் தொடர்ந்து மலேசிய அரசாங்க அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் ரவிஷ் குமார் மேலும் தெரிவித்திருக்கிறார். சாகிர் நாயக்கைச் சந்தித்திருக்கும் பிரதமர் துன் மகாதீர் இதுபோன்ற நாடு கடத்தும் விண்ணப்பங்களின் நெருக்கடிகளுக்கு நாம் அடிபணியக் கூடாது எனத் தெரிவித்திருந்தார்.