Home நாடு ரஷிட் ஹஸ்னோன் – கோர் மிங் துணை சபாநாயகர்கள்

ரஷிட் ஹஸ்னோன் – கோர் மிங் துணை சபாநாயகர்கள்

1311
0
SHARE
Ad
முகமட் ரஷிட் ஹஸ்னோன் – நாடாளுமன்ற துணை சபாநாயகர்

கோலாலம்பூர் – நேற்று திங்கட்கிழமை தொடங்கிய 14-வது நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் டத்தோ முகமது அரிப் அவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்குத் துணையாக இரண்டு பேர் துணை சபாநாயகர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஜோகூர் பத்து பகாட் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் ரஷிட் ஹஸ்னோன் மற்றும் தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் இங்கா கோர் மிங் ஆகிய இருவரும் நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களின் பெயர்களை துன் மகாதீர் முன்மொழிய, வான் அசிசா வழிமொழிந்தார்.

இங்கா கோர் மிங் – நாடாளுமன்ற துணை சபாநாயகர்

எதிர்க்கட்சித் தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி தேசிய முன்னணி சார்பிலான துணை சபாநாயகராக பெலுரான் நாடாளுமன்ற உறுப்பினர் ரொனால்ட் கியாண்டியை முன்மொழிந்தார்.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் ரஷிட் ஹஸ்னோன் 171 வாக்குகள் பெற்றார். கோர் மிங் 124 வாக்குகள் பெற்றார். ரொனால்ட் கியாண்டி 93 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

ரஷிட் ஹஸ்னோன் பினாங்கு மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வராவார். ஜோகூர் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றாலும் கடந்த 2013 பொதுத் தேர்தலில் பினாங்கு சட்டமன்றத்திற்குப் போட்டியிட்டு வெற்றி பெற்று அம்மாநிலத்தின் துணை முதல்வராக பிகேஆர் சார்பில் நியமிக்கப்பட்டார். மே 9 பொதுத் தேர்தலில் தனது பூர்வீக மாநிலமான ஜோகூருக்குத் திரும்பி பத்து பகாட் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

14-வது நாடாளுமன்றத்தின் அமைப்பைக் காட்டும் வரைபடம்

இங்கா கோர் மிங் சிறந்த, பரபரப்பான, அதிரடி பேச்சுகளுக்குச் சொந்தக்காரர். பேராக் மாநில ஜசெக தலைவர். இந்த முறை தெலுக் இந்தானில் போட்டியிட்டு கெராக்கான் தலைவர் மா சியூ கியோங்கைத் தோற்கடித்தார். அவர் வெற்றி பெற்றார் அமைச்சராவார் என பொதுத் தேர்தலுக்கு முன்பே லிம் குவான் அறிவித்திருந்தார். எனினும் கோர் மிங் பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போது மகாதீர் குறித்துக் கூறிய சில கருத்துகள் சர்ச்சையானதைத் தொடர்ந்து அவர் மகாதீரின் அமைச்சரவையில் இடம் பெற முடியாமல் போனது.

ஒரு வழக்கறிஞரான கோர் மிங்குக்கு தற்போது நாடாளுமன்ற துணை சபாநாயகர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.