Home நாடு “ஜோகூர் இந்தியர்களின் மேம்பாட்டுக்கு புதிய அணுகுமுறைகள்” – இராமகிருஷ்ணன் நேர்காணல் (1)

“ஜோகூர் இந்தியர்களின் மேம்பாட்டுக்கு புதிய அணுகுமுறைகள்” – இராமகிருஷ்ணன் நேர்காணல் (1)

1638
0
SHARE
Ad

ஜோகூர் பாரு – (14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஜோகூர் மாநிலத்தின் புதிய ஆட்சிக் குழு உறுப்பினராக நியமனம் பெற்றுள்ள ஜசெகவின் பெக்கோக் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ்.இராமகிருஷ்ணன் செல்லியல் ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்)

ஜோகூர் மாநில இந்திய சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் புதிய அணுகுமுறைகளும், வியூகங்களையும் வகுத்து வருவதாகக் கூறுகிறார் புதிதாக அமைந்துள்ள ஜோகூர் மாநில நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தில் ஆட்சிக் குழு உறுப்பினராகவும், இந்தியர்களுக்கான பிரதிநிதியாகவும் பொறுப்பேற்றுள்ள டாக்டர் எஸ்.இராமகிருஷ்ணன்.

நடப்பு பெக்கோக் சட்டமன்ற உறுப்பினருமான இராமகிருஷ்ணனின் ஜோகூர் மாநில அரசியல் பிரவேசம் 2013 பொதுத் தேர்தலின்தான் முதன் முதலில் நிகழ்ந்தது. கடந்த 2013 பொதுத் தேர்தலில் ஜோகூர், லாபிஸ் நாடாளுமன்றத் தொகுதிக்கான ஜசெக வேட்பாளராக எஸ்.இராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டபோது அவரை அணுக்கமான அறிந்திருந்தவர்களில் பலரும் கூட ஆச்சரியப்பட்டனர். காரணம், அவர் எப்போதுமே சிலாங்கூர் மாநிலத்தைத்தான் களமாகக் கொண்டு அரசியல் பணியாற்றி வந்தார்.

#TamilSchoolmychoice

தனது அரசியல் பணிகளுக்கு நடுவில் அவ்வப்போது எழும் சமூகப் பிரச்சனைகள் குறித்து விரிவாக பத்திரிக்கை அறிக்கைகள் வாயிலாக விவாதிக்கும் – விளக்கும் – வழக்கம் கொண்டவர் இராமகிருஷ்ணன்.

சிலாங்கூரில் இருந்து ஜோகூருக்கு…

சிலாங்கூர் மாநிலத்திலிருந்து எப்படி ஜோகூர் மாநில அரசியலுக்குள் நுழைந்தீர்கள் எனக் கேட்கப்பட்டபோது, விவரிக்கத் தயாரானார் ‘ராமா’ என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் இராமகிருஷ்ணன்.

அதற்கு முன்பாக அவரது அரசியல் பிரவேசத்தையும் அவர் மூலமாகவே சுருக்கமாக தெரிந்து கொள்வோம்.

14-வது பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பெக்கோக் சட்டமன்ற வேட்பாளரான இராமகிருஷ்ணன் – லாபிஸ் நாடாளுமன்ற ஜசெக வேட்பாளர் பாங் ஹோக் லியோங்

இராமகிருஷ்ணன் கணக்கியல் துறைப் பட்டதாரி (CIMA – Chartered Institute of Management Accountants). அந்தப் பட்டப் படிப்பை இலங்கையில் படித்து முடித்து விட்டு மலேசியா திரும்பிய அவர் சில கல்லூரிகளில் விரிவுரையாளராகவும், சில நிறுவனங்களிலும் பணியிலும் ஈடுபட்டார். இதற்கிடையில், எம்பிஏ (MBA) எனப்படும் வணிக நிர்வாகத் துறைக்கான முதுகலைப் பட்டப் படிப்பையும், நிதித் துறையில் டாக்டர் (PHD) பட்டத்தை துன் அப்துல் ரசாக் பல்கலைக் கழகத்திலும் முடித்தார்.

வேலை செய்து கொண்டிருந்தாலும், அவருக்கிருந்த சமூக, அரசியல் பார்வை அவரை இயல்பாகவே அரசியல் களப்பணிக்கு கைப்பிடித்து அழைத்துச் சென்றது. 1999-ஆம் ஆண்டு முதற்கொண்டே ஜசெகவில் ஈடுபாடு கொண்டிருந்த இராமகிருஷ்ணன் நண்பர்களுடன் இணைந்து பல சமூகப் பணிகளில் ஈடுபட்டார். “எனக்குப் பிடித்த வாசகம் மகாத்மா காந்தியின் ‘நீ மாற்றத்தைக் கொண்டுவர விரும்பினால், நீயே அந்த மாற்றமாக இரு’ என்பதுதான். அதனால் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பிய நானே இறங்கி நேரடியாக அரசியல், சமூகப் பணிகளில் நண்பர்களுடன் ஈடுபடத் தொடங்கினேன்” என்கிறார் இராமகிருஷ்ணன்.

அத்தகைய அவரது நண்பர்களில் ஒருவரான சார்ல்ஸ் சந்தியாகோ, 2008 பொதுத் தேர்தலில் கிள்ளான் தொகுதி பக்காத்தான் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினராக ஜசெகவால் நிறுத்தப்பட்டார். சார்ல்சுக்காக தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கிய இராமகிருஷ்ணனின் அயராத உழைப்பும், ஆற்றலும் சக ஜசெக தலைவர்களை அவரை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்தது.

பெட்டாலிங் ஜெயா நகராண்மைக் கழக உறுப்பினராக…

2008 பொதுத் தேர்தலில் பக்காத்தான் கூட்டணி சிலாங்கூர் மாநில அரசாங்கத்தைக் கைப்பற்ற அதனைத் தொடர்ந்து பெட்டாலிங் ஜெயா நகராண்மைக் கழக உறுப்பினராக நியமனம் பெற்றார் இராமகிருஷ்ணன்.

தொடர்ந்து 2009-ஆம் ஆண்டில் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் சார்பாக நாடாளுமன்ற மேலவை (செனட்டர்) உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அதுவரையில் மக்கள் அரங்கில் சாதாரணத் தொண்டனாகப் பணியாற்றி வந்த இராமகிருஷ்ணனுக்கு நாடாளுமன்ற மேலவையில் ஒரு தவணை (3 ஆண்டுகள்) பணியாற்றும் வாய்ப்பும் இதன் மூலம் அமைந்தது. நாடாளுமன்ற மேலவையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த முதல் இந்தியராக இடம் பெற்றவர் இராமகிருஷ்ணன்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவரையில் நாடாளுமன்ற மேலவையில் இடம் பெற்று வந்த இந்தியர்கள் அனைவரும் தேசிய முன்னணி சார்பாகவே நியமிக்கப்பட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகப் பணிகள், நாடாளுமன்ற விவாதங்களில் ஈடுபடுவது போன்ற அரசியல் பணிகளோடு இராமகிருஷ்ணன் செயல்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில்தான் 2011-ஆம் ஆண்டில் ஜோகூர் மாநிலத்தில் நிகழ்ந்த தெனாங் சட்டமன்ற இடைத் தேர்தல் இராமகிருஷ்ணனை ஜோகூர் மாநில அரசியல் களத்திற்கு அழைத்துச் சென்றது.

லாபிஸ் நாடாளுமன்றத்திற்குப் போட்டி

 

லாபிஸ் நாடாளுமன்றத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் தெனாங் மற்றும் பெக்கோக் ஆகும். தெனாங் சட்டமன்ற இடைத் தேர்தலில் ஜசெகவிற்கு பிரச்சாரங்களில் உதவுவதற்காக லாபிஸ் சென்ற இராமகிருஷ்ணன் அங்கு குறிப்பாக இந்தியர்களிடையே பக்காத்தான் மற்றும் ஜசெக கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு தீவிரமாக உழைத்தார். 2011 தெனாங் சட்டமன்ற இடைத் தேர்தலில் பக்காத்தான் கூட்டணி தோல்வியடைந்தாலும், லாபிஸ் வட்டாரத்தில் பக்காத்தான் கூட்டணியைப் பலப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக உணர்ந்த இராமகிருஷ்ணன், ஏற்கனவே, சிலாங்கூர் மாநிலத்தில் ஜசெகவும், பக்காத்தான் கூட்டணியும் வலுவாக கால் ஊன்றிவிட்ட நிலையில், அந்த காலகட்டத்தில் தேசிய முன்னணியின் கோட்டையாகக் கருதப்பட்ட ஜோகூர் மாநிலத்தில் தனது உழைப்பும் தேவையும் அதிகம் இருப்பதாக உணர்ந்தார்.

அதற்கேற்ப தெனாங் சட்டமன்ற இடைத் தேர்தலுக்குப் பின்னரும் தொடர்ந்து லாபிஸ் தொகுதிக்கு அடிக்கடி சென்று அங்கு களப்பணி ஆற்றி வந்த இராமகிருஷ்ணன் லாபிஸ் ஜசெகவின் தலைவராகவும், ஜோகூர் மாநிலத்தின் துணைத் தலைவராகவும் நியமனம் பெற்றார். அவரது கடுமையான உழைப்பு காரணமாக 2013 பொதுத் தேர்தலில் அவருக்கு லாபிஸ் நாடாளுமன்றத்தில் போட்டியிடும் வாய்ப்பை ஜசெக அவருக்கு வழங்கியது.

லாபிஸ் – 2013 பொதுத் தேர்தல் முடிவுகள்

அந்த காலகட்டத்தில் லாபிஸ் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வெல்வது என்பது எளிதானதாகப் பார்க்கப்படவில்லை. காரணம் மசீச தலைவராக இருந்த டத்தோஸ்ரீ சுவா சோய் லெக் போட்டியிட்டு வென்றிருந்த அந்தத் தொகுதியில் 2013-இல் துணையமைச்சராக இருந்த அவரது மகனான சுவா தி யோங் போட்டியிட்டார். எனினும், இராமகிருஷ்ணன் வழங்கிய கடுமையான போட்டியின் காரணமாக 353 வாக்குகள் பெரும்பான்மையிலேயே சுவா தி யோங் லாபிஸ் நாடாளுமன்ற உறுப்பினராக வெல்ல முடிந்தது. எனினும் அந்தப் போராட்டத்தில் லாபிஸ் நாடாளுமன்றத்தின் கீழ் வரும் பெக்கோக் சட்டமன்றத்தை ஜசெக கைப்பற்றியது.

2013-க்குப் பின்னரும் லாபிஸ் தொகுதியிலேயே தொடர்ந்த சேவை…

2013 பொதுத் தேர்தலில் தோல்வியுற்றாலும், லாபிஸ் வட்டார சீனர்களும், இந்தியர்களும் வழங்கிய அபரிதமான ஆதரவைத் தொடர்ந்து இராமகிருஷ்ணன் தொடர்ந்து அந்தத் தொகுதியிலேயே களப்பணி ஆற்றி, பக்காத்தான் கூட்டணியின் கட்டமைப்பை ஜோகூர் மாநிலத்தில் வலுவாக்க முடிவு செய்தார். அதற்கேற்ப அந்தத் தொகுதியின் பக்காத்தான் கூட்டணி ஆதரவாளர்களும், “இப்போது நீங்கள் லாபிசை விட்டுச் சென்று விட்டால், இங்கு அரசியல் பணியின் தொடர்ச்சி துண்டிக்கப்படும். வெற்றிடம் ஏற்பட்டு விடும். தொடர்ந்து இங்கேயே போராடுவோம்” என்று கேட்டுக் கொள்ள லாபிஸ் தொகுதியை மையமாக வைத்து தனது அரசியல் பணிகளை ஜோகூர் மாநிலத்தில் தொடர்ந்தார் இராமகிருஷ்ணன்.

அவரது வியூகமும், தூரநோக்கும் 2018-இல் பலனளித்தது. 14-வது பொதுத் தேர்தலில் ஜசெக-பக்காத்தான் கூட்டணியின் வியூகமும் லாபிஸ் தொகுதியில் சற்றே மாற்றியமைக்கப்பட்டது. லாபிஸ் நாடாளுமன்றத் தொகுதிக்கு ஜசெக சார்பில் நிறுத்தப்பட்ட பாங் ஹோக் லியோங் 3,408 வாக்குகள் பெரும்பான்மையில் மசீசவின் சுவா தி யோங்கைத் தோற்கடிக்க, பெக்கோக் சட்டமன்றத்திற்குப் போட்டியிட்ட இராமகிருஷ்ணன் 2,457 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

தொடர்ந்து ஜோகூர் மாநில அரசாங்கமும் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி வசம் வீழ, ஆட்சிக் குழு உறுப்பினராக நியமனம் பெற்றார் இராமகிருஷ்ணன்.

-இரா.முத்தரசன்

தொடர்புடைய முந்தைய கட்டுரை:

“ஜோகூர் இந்தியர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்போம்” – இராமகிருஷ்ணன் நேர்காணல் (காணொளி)

அடுத்து – இராமகிருஷ்ணன் நேர்காணல் பாகம் (2)

  • ஆட்சிக் குழு உறுப்பினராகப் பொறுப்பேற்றது முதல் எதிர்நோக்கும் சவால்கள்…
  • ஜோகூர் இந்தியர்களின் மேம்பாட்டுக்கான அணுகுமுறைகள்…